இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த அக்ஷ்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எனக்கு கடந்த மார்ச் மாதத்துடன் 18 வயது முடிந்துவிட்டது. வாக்கு அளிக்கும் உரிமை உள்ளது. ஆனால், தேர்தல் ஆனையம் என் மனுவை ஏற்கவில்லை.எனக்கு வாக்களிக்க அனுமதி தர வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பாக மூத்த வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜராகி, ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தால்தான் சட்டப்படி வாக்குரிமை வழங்க முடியும். மனுதாரருக்கு மார்ச் மாதம்தான் பூர்த்தியாகியுள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி 1ம் தேதி 18 வயது ஆனவர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்படும். எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.இதை நீதிபதிகள் ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.