திரையில் அறிவு ஒளி ஏற்றும் ஆசிரியர்-kalvivikatan


பள்ளிப் பாடத்திட்டம் என்பது, தானாக மாணவர்களைப் புத்தகம் எடுத்து, படிக்கத் தூண்ட வேண்டும். அதற்காக, என்னாலான முடிந்த சிறு முயற்சிதான் இது'' என்கிறார் வில்சன் பிரபாகர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி டி.யூ.என்.எஸ் வைத்தியலிங்கம் மேல்நிலைப் பள்ளியின், உதவித் தலைமை ஆசிரியர் வில்சன் பிரபாகர். ''மாணவர்கள், பாடங்களை விரும்பிக் கற்கவும் சந்தேகங்களைக் காட்சிகள் மூலம் தெளிவாக அறியவும் என்ன செய்யலாம் என யோசித்தேன். எனது சொந்தச் செலவில் கணினி, புரொஜெக்டர், ஸ்க்ரீன், பாடத்திட்டங்கள் சம்பந்தமான குறுந்தகடுகளை வாங்கினேன். அதை வகுப்பில் போட்டுக் காண்பிக்கிறேன். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கிறார்கள்'' என்கிறார்.

இவர், 18 வருடங்களாக என்.சி.சி. ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். ''வில்சன் சாரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. 'வாழ்க்கையில் முன்னேற, எண்ணும் எழுத்தும் மட்டும் போதாது. அதையும் தாண்டி நிறைய இருக்கு’னு சொல்வார். உடல்திறன் மேம்பட, கராத்தே ஆசிரியரை வரவழைத்து, எங்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்'' என்கிறார் ஒரு மாணவர்.

''சார் வீட்டில அறிஞர்கள், வரலாற்று நாயகர்களின் வரலாறு, இலக்கியங்கள் என நிறையப் புத்தகங்கள் இருக்கும். அதை எடுத்துவந்து கொடுப்பார். பள்ளியில் ஒரு நூலகத்தையும் உருவாக்கி இருக்கிறார்'' என்கிறார் ஒரு மாணவி.

''ஆசிரியர்கள் மாணவர்களில் இருந்து எந்த வகையிலும் தனியாகத் தெரியக் கூடாது என்பதற்காக மாணவர்களைப் போலவே சீருடை அணிந்து வருவார். அதாவது, வெள்ளை சட்டை, நீலநிற பேன்ட் என ஒரு வருடம் முழுக்க வந்தால், அடுத்த வருடம் வேறு சீருடை'' என்கிறார் ஒரு மாணவர்.

மாதம்தோறும் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இருந்து விநாடி-வினா போட்டி நடத்தி, பரிசு கொடுக்கும் வில்சன் பிரபாகர், ''என் பள்ளி மாணவர்கள் மட்டும் இல்லாமல், அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் பயனடைய நினைக்கிறேன். எந்தப் பள்ளியில் கூப்பிட்டாலும் நேரம் ஒதுக்கி, புரொஜெக்டர் மூலம் பாடங்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பெடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.

இவருடைய சேவையை, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் பாராட்டியிருக்கிறார். ''இந்த உலகில், நாம் பெரியதாகச் சாதிக்க வேண்டியது இல்லை. வந்தோம் சென்றோம் என்பதைக் கொஞ்சம் மாற்றி, 'வந்தோம் செய்தோம்’ என்று இருந்தாலே போதும்'' என்று சிரிக்கிறார் இந்த அற்புத ஆசிரியர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி