விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா? 

இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய நீர்யானை பொம்மையை பார்க்கலாம். அந்த நீர்யானை படத்துக்கு கீழே தான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரியனும் வைச்சுக்கங்க, அந்த வார்த்தையை நீர்யானை படத்துக்கு கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்தால் போதும் . அந்த வார்த்தைக்கான அர்த்தம் வந்து நிற்கும். அட, இதற்கு தான் ஆன்லைன் அகராதிகள் இருக்கேன்னு நீங்கள் நினைக்கலாம். இந்த தளம் அதுக்கு மேலே. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இந்த தளத்தில் என்ன எல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டால் அசந்து போவீங்க.

இதில் வார்த்தையை டைப் செய்ததுமே , அந்த வார்த்தை தொடர்பாக உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கப்படும். அதாவது அந்த வார்த்தைக்கான எதிர் சொல் வேணுமா ? அல்லது அதற்கான இன்னொரு வார்த்தை வேணுமா? இல்லை அந்த சொல்லுடன் எதுகை மோனை நயத்துடன் சேர்ந்து ஒலிக்க கூடிய சொற்கள் தேவையா ? இப்படி பலவிதமான தேர்வுகள் கொடுகப்பட்டிருக்கும். இதற்காகவே தனியே ஒரு பட்டியல் இருக்கு. அவற்றில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்தால் , அதற்கான பதில் அடுத்த பக்கமாக வந்து நிற்கும்.

நீங்கள் கேட்ட பதிலோடு இருக்கும் இந்த புதிய பக்கத்தை பார்த்தால் அப்படியே அசந்து போயிடுவீங்க ! ஏன்னா, நீங்க தேடிய பதிலும் கச்சிதமாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தேடாத பலவிஷயங்களுக்கான பரிந்துரைகளும் இருக்கும். இந்த பரிந்துரைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்தால் அந்த வார்த்தை தொடர்பான அநேக பயன்பாடுகள் அத்துபடியாகிவிடும்.

உதாரணத்துக்கு ஒரு வார்த்தையை தேடிப்பார்ப்போமா ? இண்டரியேக்டிவ் ( interactive ) - ’இரண்டு நபர்கள் அல்லது பொருட்கள் பரஸ்பரம் பாதிப்பு கொண்டிருப்பது’ என்று இந்த சொல்லுக்கு அர்த்தம் சொல்லப்படுகிறது. கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பயன்படுத்தப்பும் சொல்லாகவும் இருப்பதால் அந்த பயன்பாடு பற்றிய பொருளும் இடம்பெற்றுள்ளது.

சரி, இந்த வார்த்தைக்கு அர்த்தம் கிடைச்சாச்சு. அடுத்து என்ன ?
இண்டரியேக்டிவ் போலவே வேறு வார்த்தைகள் என்ன என்ன ? இதற்கான எதிர் பதம் என்ன ? அவற்றையும் தேடிப்பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போலவே இந்த பக்கத்திலேயே இவற்றுக்கான பரிந்துரைகள் இருக்கு. அவற்றில் தேவையானதை கிளிக் செய்தால் போதும். கம்யூனிகேட்டிங் ( communicating) கொலாப்ரேட்டிங் ( collaborating ) ஷேர்ட் ( shared ) . இவை எல்லாம்
இண்டரியேக்டிவ் எனும் வார்த்தையின் தோழர்கள். சரி இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது ? அதற்கான உதாரணங்களையும் பார்க்கலாம். இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று சந்தேகமாக இருக்கிறதா ? அதையும் தீர்த்துக்கொள்ளலாம். இப்படி தேடும் சொற்களுக்கான பெயர்சொல் , வினைசொல் போன்றவை இருந்தால் அவற்றையும் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமா, இண்டரியேக்‌ஷனல் , இண்டர்ரியேக்‌ஷன்ஸ் போன்ற இண்டர் … என துவங்கும் பிற சொற்களுக்கான அர்த்தம் மற்றும் இதர பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தை தொடர்பான பரிந்துரைகளை பார்த்தாலே புதிய வார்ததைகளை அறிமுகம் செய்து கொள்ளலாம். பார்த்தீங்களா? நாம் ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தான் தேடினோம், ஆனால் அந்த ஆங்கில வார்த்தை தொடர்பான பல விஷயங்கள் முன் வைக்கப்பட்டதுடன் , தொடர்புடைய வேறு வார்த்தைகளையும் தெரிஞ்சுக்க முடியுது. பொதுவா , அகராதிகளிலேயே இந்த வசதிகள் இருக்கும். ஆனா, இந்த இணையதளத்தில் அவை போரடிக்காத வகையில் ரொம்ப எளிமையாக தொகுத்து தந்து இருக்காங்க. ஒரு பொருளை தேடும் போது தொடர்புடைய பயன்பாடுகள் சங்கிலி தொடர் போல கொடுக்கப்பட்டுள்ளதால் , ஆர்வத்தோடு அவற்றை தேடிப்போக தோணும். எதோ வினைச்சொல், பெயர்சொல் தேடிப்போகிறோம் என்ற அலுப்போ , மலைப்போ ஏற்படாது.
இன்னொரு விஷயம் , இந்த தளத்தின் மூலமே குறிப்பிட்ட வார்ததைகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்தும் கொள்ளலாம். ஆக , ஆங்கில வார்த்தைக்கு இணையான ஜெர்மன் மொழி சொல்லையோ இத்தாலிய மொழி சொல்லையோ தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கில பெயர்கள் ,அவற்றின் அர்த்தம், அவை உருவான விதம் என்று இன்னும் ஏகப்பட்ட விஷ்யங்கள் இந்த தளத்தில் இருக்கு. அவற்றை நீங்களே பயன்படுத்தி பாருங்கள் இது தான் தளத்தின் முகவரி; http://www.wordhippo.com/.
உங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் இருந்தாலும் சரி , அல்லது ஆங்கிலம் தொடர்பாக அச்சம் இருந்தாலும் சரி இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். ஆர்வத்தை வளர்க்கும். அச்சத்தை போக்கும். சோ, யூஸ் செய்து பாருங்க!.

சரி, ஆங்கிலம் கற்றுக்கொண்டு களைப்ப் ஏற்ப்பட்டதாக நினைத்தால் வேர்டுவேர்ல்டு (http://www.wordworld.com/ ) தளத்தின் பக்கம் போய பாருங்கள் . ஆன்கில மொழி தொடர்பான பிரபல டீ.வி தொடருக்கான இந்த தளத்தில் வார்த்தைகள் தொடர்பான விளையாட்டுகள், செல்போன் செயலிகள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலம் மட்டும் தானா ? இதோ இந்தி மொழி சொற்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த தளத்தை முயன்று பாருங்கள்; http://kidsone.in/hindi/writetheLetters/worksheetHindi.jsp. தெலுங்கு ,தமிழும் கூட இந்த தளத்தில் இருக்கு. தமிழ் பகுதி இங்கே : http://kidsone.in/tamil/learntamil/


நன்றி சுட்டி விகடன்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி