மத்திய அரசு ஊழியர்களைபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுமா?


மத்திய அரசு ஊழியர்களுக்கு, மீண்டும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்று தமிழகஅரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதுவும் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டாவது முறையாக இரட்டை இலக்கத்தில் அகவிலைப் படி உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இது ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு அமலுக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 90 சதவீதம் அளவிற்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

தற்போது அகவிலைப்படி உயர்வு 100 சதவீதத்தை எட்டியதும், ஊழியர்களின் ஊதிய விகிதம் சீரமைக்கப்படும். அதாவது அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள நடைமுறைப்படி, அகவிலைப்படி உயர்வு 50 சதவீதத்தை தாண்டியதும், அகவிலைப்படி, ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் சேர்த்தால், ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப பிற அலவன்ஸ்கள் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.கே.என்.குட்டி கூறுகையில், ‘‘ இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை. ஏனெனில், 2014 ஜனவரி 1 நிலவரப்படி, நடைமுறையில் வாழ்க்கை செலவு சுமார் 300 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆனால், 100% அளவுக்கு தான் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது’’ என்றார்.

மத்திய அரசு முடிவு செய்துள்ளதைப்போல், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். வழக்கமாக மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது எல்லாம் தமிழக அரசும் அதற்கு நிகராக தன்னுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். அதேபோல் இம்முறையும் நடக்கும் என்று தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசு ஊழியர்கள் குஷியில் உள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி