ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு : திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தகவல்

"ஆதார் அடையாள அட்டை, தபால் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், இணைய தளம் வாயிலாக, ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,' என, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடந்தது. கடந்த டிச., மாதம், முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பதிவு முகாம் நடந்ததால், கணக்கெடுப்பில் விடுபட்டவர்களும், இடைப்பட்ட காலத்தில் குடிபெயர்ந்தவர்களாலும் பதிவு செய்ய முடியவில்லை.

விடுபட்ட நபர்கள் பயனடையும் வகையில், இரண்டாம் கட்ட முகாம், பிப்., இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது. அதற்காக, அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வரி வசூலிப்பு மையங்களில், படிவம் பெற்று வரும் 7ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படும் என்பதால், அருகில் உள்ள பள்ளிகளில் படிவம் வழங்கப்பட்டு, திரும்ப பெறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக, 15 லட்சத்து 700 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இது, 67 சதவீதம். பெரும் பாலான மாவட்டங்களில், முதல் கட்ட முகாமில், 70 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், வேறிடங்களுக்கு குடிபெயர்வது அதிகளவில் நடப்பதால், மூன்று சதவீதம் குறைவாக நடந்துள்ளது.
ஆதார் பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதத்துக்குள் டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து, அவரவர் வீடுகளுக்கு தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் குறிப்பிட்டிருந்தால், அட்டை தயாரானதும், எஸ்.எம்.எஸ்., அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு ஆதார் அட்டைகள் கிடைத்திருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இதுவரை அட்டை குறித்த விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், ஆதார் பதிவு செய்துவிட்டு, அடையாள அட்டைக்காக காத்திருப்பவர்கள், இணைய தளம் மூலமாக அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆதார் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
மொபைல் போன் மூலமாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஆதார் அட்டை குறித்த தகவல் அனுப்பப்படுகிறது. http://resident.uidai.net.in/web/resident/chekaadhaarstatus என்ற இணைய தள முகவரியில் சென்று தங்களது கார்டு விவரங்களை கண்டறியலாம். ஆதார் அட்டை பதிவை உறுதி செய்த பிறகு, http://eaadhaar.uidai.gov.in என்ற முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரியான விவரங்களை கொடுத்திருந்தும், அட்டை தவறாக இருந்தால், http://resident.net.in/updatedata என்ற இணைய தள முகவரியில் சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாடு முழுவதும், ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்தனியாக ஆதார் எண் வழங்கப்படுவதால், தபால் மூலமாக அட்டை கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும் கூட, இணைய தளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, 1800 300 1947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இருப்பினும், பதிவு முகாம்களில் வழங்கப்பட்ட ஒப்புகை சான்றுகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், என்றனர். எஸ்.எம்.எஸ்., எப்படி? மொபைலில், uid (இடைவெளி) status (இடைவெளி) என்று டைப் செய்தபின், பதிவு முகாமின்போது வழங்கிய ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து, 51969 என்ற எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். சிறிது நேரத்தில், ஆதார் அட்டை தொடர்பான தகவல் அனுப்பப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி