உதல்குரி: "மன உறுதியும், துணிச்சலும் இருந்தால், மலையும் மடுவாகும்" என்பர். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அசாமில் வாட்ச்மேன் வேலை பார்க்கும் ஒருவரின் மகள் இளம் எழுத்தாளருக்கான, "சாகித்ய அகாடமி" விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
அசாம் தலைநகர் திஸ்பூரில் இருந்து, 140 கி.மீ., தொலைவில் உள்ள உதல்குரி மாவட்டத்தில், குக்கிராமம் ஒன்றில் பிறந்த சன்சுமாய் குங்கிரி பாசுமத்ரி, 27. மாநிலம் முழுவதும் இன்று பிரபலமாகி உள்ளார். ஒரு காலத்தில் 1,000 ரூபாய்க்கு அவதிப்பட்ட அவருக்கு, இன்று கிடைத்துள்ள பிரபலத்தால், இவரது கிராமம் புது வசந்தம் பெற்றுள்ளது.
போடோ மொழியில் இவர் எழுதிய "பெலான்கினி சவ்காரி" என்ற நாவலுக்கு, இளம் எழுத்தாளருக்கான, சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எழுதத் துவங்கிய, சன்சுமாய், கல்லூரியில் சிறுகதைகள் எழுத துவங்கினார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், இவர் கடுமையாக போராட வேண்டியிருந்தது.
ஐந்து சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்த சன்சுமாயின் தந்தை ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார். ஏழ்மையை நன்றாக படித்ததால் இவரது குடும்பத்தின் பாடே, நல்ல கதைகளமாக அமைந்தது. இவர் எழுதிய கதைகளையும், நாவல்களையும் புத்தகமாக போடுவதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். புத்தகம் போடுவதற்கு, வடிவமைப்பதற்கே பணம் கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார்.
எழுத்தின் மேல், மகளுக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து, இவரது தாய் வட்டிக்கு, 40 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி நாவலை பிரசுரிக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த நாவல் தான் இவருக்கு, பரிசு வாங்கி கொடுத்துள்ளது. புத்தகம் வெளிவந்ததும், வீடு வீடாக சென்று 50 புத்தகங்கள் மட்டுமே விற்க முடிந்துள்ளது. இப்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்த பின் பல பதிப்பகங்கள் இவரது புது நாவலை வெளியிடுவதற்கு முன்வந்துள்ளன.
தற்போது தேஸ்பூரில் போடோ மொழியில், முதுகலை பட்டத்திற்காக படித்து வரும் இவர் புது நாவல் ஒன்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு விருது கிடைத்த வெளிச்சத்தில், அசாம் அரசு மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனால் தான், இவருக்கு புது சொக்காய் கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது. அடுத்த மாதம் ஜோத்பூரில் நடக்கும், சாகித்ய அகாடமி விருது விழாவில், விருது வாங்குவதற்கு செல்ல சன்சுமாய் தயாராகி வருகிறார்.