பள்ளி மாணவர்களிடம் மனித நேயத்தை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்: கலெக்டர் நந்தகோபால் பேச்சு

பள்ளி மாணவர்களிடம் மனித நேயத்தை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று, கலெக்டர் நந்தகோபால் கூறினார்.

மனிதநேய வார நிறைவு விழா
வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது. விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 2012–2013–ம் ஆண்டில் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளி மாணவ– மாணவிகளுக்கு கலெக்டர் நந்தகோபால் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மனிதநேய வார விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா நடத்துவதன் காரணம் அனைத்து மாணவர்களும் சாதி, மதம் வேறுபாடு இன்றி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். மனித நேயம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா மக்களும் ஒற்றுமையுடன், சாதி வேறுபாடு இல்லாமல் துன்பம் வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதே ஆகும். வரலாற்றில் சாதி இல்லாமல் சிறப்பாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

நாகரீக மாற்றம்
பண்டைய காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களாக பிரித்து அதன் அடிப்படையில் வழிபாடு நடத்தி வாழ்ந்து வந்தனர். தற்போது நாகரீக மாற்றத்தால் சாதி, மதம், மொழி என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்காக உழைத்தவர் அம்பேத்கர். பல திட்டங்களை உருவாக்கியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்தால் உற்சாகத்தை கொடுக்கும். தன் சொந்த முயற்சியால் இந்திய சட்ட வரைவு குழுவிற்கு தலைமை தாங்கினார். ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் அம்பேத்கர்.

கற்றுக் கொடுக்க வேண்டும்
காந்திக்கும், தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காந்தி தமிழ் மக்களை பார்த்துதான் உயர்ரக ஆடைகளை இனி அணிய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார். பெரியார் இட ஒதுக்கீடு கொள்கையை வகுத்தார். அதன்படிதான் அரசு வேலையில் நாம் வேலை செய்கிறோம்.
ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு மனிதநேயம், மாண்பு, வரலாற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டிற்காக தலைவர்கள் எப்படியெல்லாம் உழைத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இரக்கத்திற்கும், மனிதநேயத்திற்கும் வேறுபாடு உள்ளது. மனித நேயம் என்ற பெயரில் நாம் ஏமாறக்கூடாது. இந்தியா உலகத்திலேயே மக்கள் தொகையில் 2–வது இடம் வகிக்கிறது. அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு. ஆனால் இங்குதான் மதம், சாதி, உட்பிரிவுகள் அதிகமாக காணப்படுகிறது. இதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.

உறுதி ஏற்பீர்
மாணவர்களாகிய நீங்கள் வரலாற்றையும், வரலாற்று தலைவர்களின் தியாகத்தையும் அறிந்து கொண்டு இந்த மனிதநேய விழாவில் தீண்டாமை ஒழித்திட உறுதி ஏற்று வாழ்ந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி