அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இணையதள பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தலுக்கு பயன்படுத்தும் நோக்கில் கற்றல் கற்பித்தலில் இணையதள பயன்பாடு என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிறுவன முதல்வர் (பொறுப்பு) ஆர்.விஜயகுமார் பயிற்சியையும், நிறுவனத்தின் இணையதளத்தையும் தொடங்கி வைத்து பேசியது:
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஜ்ஜ்ஜ்.க்ண்ங்ற்ள்ப்ம்.ஜ்ண்ஷ்.ஸ்ரீர்ம்க்ண்ங்ற் என்ற இந்த இணையதளத்தில் பாடவாரியாக இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் உருவாக்கிய பாடப்பொருள் சார்ந்த புகைப்படங்கள், காணொலிகள், அனிமேஷன் எனப்படும் அசைவூட்ட காணொலிகள், பிரசன்டேஷன் எனப்படும் நழுவங்கள் போன்றவற்றை இணையதளத்தில் பாடவாரியாக பதிவேற்றம்
செய்ய முடியும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட கற்றல் பொருள்களை உலகின் எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகள், மென்பொருள்கள், கற்பித்தல் உத்திகள், புதியக் கண்டுபிடிப்புகள் போன்ற பயனுள்ள தகவல்கள் இவ்விணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து ஆசிரியர்களும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு தமது உத்திகளை மற்றவர்களும் பயன்பெறும் வண்ணம் செயல்படுத்த முடியும் என்றார் அவர்.
இந்தப் பயிற்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கணினி திறன் பெற்ற 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கருத்தாளர்கள் ரமேஷ்குமார், மணிகண்டன், பணியிடைப் பயிற்சி துறைத் தலைவர் அ.ரமேஷ், பெ.கோவிந்த பிரகாஷ், பி.சோ.கேசவன், ஆர்.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.