ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி: புதிய உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு --- தினமலர் செய்தி

புதுடில்லி: நாட்டின் உயரிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை, அரசியல்வாதிகளான ஆட்சியாளர்கள், இஷ்டத்திற்கு, இடமாற்றம் செய்து, தூக்கியடிக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள், அதே பணியிடத்தில் பணியாற்ற வேண்டும். அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட உள்ள, 'சிவில் சர்வீசஸ் போர்டு' அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கைப்பாவைகளாக:
அரசியல் காரணங்களுக்காக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஆட்சியாளர்களால் அடிக்கடி இடமாற்றம், பணியிடை மாற்றம் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். மெத்தப்படித்த இத்தகைய அதிகாரிகளை, போதிய கல்வியறிவு இல்லாத, சாதாரண படிப்பு படித்த, அரசியல்வாதிகளாக இருந்து, ஆட்சியாளர்களாக மாறியவர்கள், தங்களின் கைப்பாவைகளாக பயன்படுத்தி வந்தனர். நியாயமான, நேர்மையான அதிகாரிகளை பந்தாடுவது, அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்வது என, சொல்லொண்ணா துயரங்களுக்கு, இந்த அதிகாரிகள் ஆளாகினர். இதற்கு உதாரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும், பல அதிகாரிகள் உள்ளனர். தமிழகத்தில், சகாயம் போன்றவர்களும், உ.பி.,யில், துர்காசக்தி நாக்பால், அரியானாவில், அசோக் கெம்கா போன்றோர், ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர்.

இத்தகைய சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 87 பேர், சுப்ரீம் கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், பொதுநலன் கோரும் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்களின் பணியிட மாற்றம், ஒழுங்கு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான, பணி வரன்முறைகளை, இன்னும், மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, அதிரடியாக உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த காலக்கெடு, நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவசர அவசரமாக, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:
* ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் பணியிடங்களில், குறைந்தபட்சம், இரண்டாண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

* அவர்களை இடமாற்றம் செய்வது, தண்டனை வழங்குவது, பணிஉயர்வு வழங்குவது போன்றவற்றை, அதற்கென அமைக்கப்பட வேண்டிய, சிவில் சர்வீசஸ் போர்டு தான் மேற்கொள்ள வேண்டும்.

* அந்த குழுவிற்கு, மூத்த, சீனியர், கூடுதல் தலைமை செயலர் அல்லது தலைவர், தலைமை வகிக்க வேண்டும். வருவாய் வாரியம் அல்லது நிதித்துறை கமிஷனர் அல்லது அதற்கு சமமான அந்தஸ்து கொண்ட அதிகாரி, அதன் உறுப்பினராக இருக்க வேண்டும்.

* இந்த குழுவின், உறுப்பினர் செயலராக, முதன்மை செயலர் அல்லது மாநில அரசின், பணியாளர் நலத்துறையின் செயலர் இருக்க வேண்டும்.

* ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு போன்றவற்றை, இந்த குழுவில், கூடுதலாக நியமிக்கப்படும், உள்துறையின் செயலர் அல்லது முதன்மை செயலர் மற்றும் டி.ஜி.பி., மேற்கொள்வார்.

* அது போல், ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் விவகாரத்தையும், சிவில் சர்வீசஸ் போர்டில், இது போல், கூடுதலாக நியமிக்கப்படும், இரு அதிகாரிகள் மேற்கொள்வர்.

* எந்த பணியிடத்திலும், குறைந்தபட்சம், இந்த அதிகாரிகள், இரண்டாண்டுகள் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு, பணி ஓய்வு, பயிற்சி போன்ற நியாயமான காரணங்கள், போர்டால் ஏற்றுக் கொள்ளப்படும்.

* அதிகாரிகள் மீதான, எந்த நடவடிக்கைக்கும், சிவில் சர்வீசஸ் போர்டின் ஒப்புதல் அவசியம். எனினும், தகுந்த ஆணையம், இந்த போர்டின் பரிந்துரையை நிராகரிக்கலாம்.

* இரண்டாண்டுகளுக்குள் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டி வந்தால், அவரின் விருப்பம் அவசியம்.

* இந்த போர்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளிக்க வேண்டும். அதில், தன் செயல்பாடுகளை வெளிப்படையாக பட்டியலிட வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது முதற்கட்டம் தான்:
மத்திய அரசின் இந்த முடிவு, காலம் தாழ்ந்து வந்துள்ள போதிலும், அதை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.ஸ்., அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். வழக்கு தொடர்ந்த, தமிழகத்தை சேர்ந்த, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் இது குறித்து கூறுகையில், ''இது முதற்கட்டம் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. லோக்பால் உட்பட பல முக்கியமான துவக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகத்திற்கான துவக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி