தமிழகம் விரைவில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் என்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், பள்ளிக் கல்வியில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை, 2013-2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பு தாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத் இருக்கிறோம். விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.