பண்ணைப் பள்ளிகளும் கள்ள மௌனமும் -neTHE HINDU


பெரும்பாலும் மௌனத்தை அடைகாப்பதும், அடைகாத்த அத்தனை மௌனங்களுக்கும் சேர்ந்தார்ப்போல் எப்போதாவது முழங்கிவிட்டு ஓய்வதுமாக இந்த சமூகம் மாறிவிட்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா சீரழிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இந்தியாவும் பதறியது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அரசும் தன் பங்கிற்கு நிர்பயாவை சிங்கப்பூருக்கு சிகிச்சையளிக்க அழைத்துச் சென்றது. குற்றவாளிகளில் ஒருவன் இறந்துபோகவும் சிறைச்சாலை எளிதில் வாய்ப்பளித்தது. வழக்கின் தீர்ப்பு கூட விரைந்து வெளியானது. 

அதே வாரத்தில் தூத்துக்குடியில் வண்புணர்வு செய்யப்பட்டு கொலையான ஓர் ஏழைப் பள்ளி மாணவி குறித்து பெரிய அதிர்வலை ஏற்படவில்லை என்றே சொல்லவேண்டும். டெல்லி சீரழிவுக்கு தமிழக வீதிகளில் கருப்பு உடையணிந்து தட்டிகளைப் பிடித்து நடந்த மகளிர் அமைப்புகள்கூட பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். இதோ இப்போது, காரைக்காலில் ஒரு பெண் குழுவாக வண்புணர்வு செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டதில்கூட, அங்கிருந்த காவல்துறை பெண் உயரதிகாரி நேரடியாக தலையிட்டு எடுத்த கைது நடவடிக்கைகளால் ஓரளவு கவனம் பெற்று 'உச்' கொட்ட வைத்திருக்கிறது.

சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவரை குத்திக் கொலை செய்தபோது ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுகளால், வெகுண்டு பதற்றப்பட்டது, பயம் கொண்டது. சில மாதங்கள் கழித்து தூத்துக்குடியில் கல்லூரி முதல்வரை மூன்று மாணவர்கள் வெட்டிக் கொலை செய்தபோது அய்யய்யோவென பதற்றப்பட்டது, ஆனாலும் அந்தப் பதற்றம் வகுப்பறை ஆசிரியை கொலை அளவுக்கு பதற்றமில்லை. ஏனெனில் ஒன்பதாம் வகுப்பு மாணவனே கொலை செய்யும்போது, கல்லூரி மாணவன் செய்வது சாதாரணம் எனும் மனப்போக்கு வந்திருக்கலாம்.

வன்புணர்வு மற்றும் வகுப்பறை வளாகக் கொலைகளுக்கு நிகராக, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பவை மாணவர்களின் தற்கொலைகள். அதிலும் அவ்வளாக வெளியில் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவை தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நிகழும் தற்கொலைகள். இந்த மாதிரி படிப்புச் சுமையும் வெகு அரிதாக வயிற்றுவலி அல்லது குடும்பச் சிக்கல்கள் மட்டும்தான் தற்கொலைக்குக் காரணமா?

ஒப்புக்கொண்டாலும் சரி... ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, இன்றைய தமிழகத்தில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் தான் 11, 12-ம் வகுப்பு கல்விக்கான சிறப்பிடமாக, புகலிடமாகத் திகழ்கின்றன. 10 வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு முந்தைய இரவு பெற்றோர்களால் பள்ளி வளாகம் நிரம்பி வழியும். அவர்களுக்காக ஸ்பெஷல் கடைகள் தோன்றுவதாகக் கூட கேள்விப்படுவதுண்டு. அதே நாமக்கல்தான் கோழிப்பண்ணைகளுக்கும், முட்டைகளுக்கும் புகழ் வாய்ந்தது என்பது ஆச்சரியமான ஒற்றுமை.

ஆண்டுதோறும் மாநில அளவிலான இடங்களை இந்தப் பகுதி பள்ளிகள் எப்படியோ பிடித்துவிடுகின்றன. பத்தாம் வகுப்பில் 470-490 க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை சலுகைகள் கொடுத்தும், கட்டணம் இன்றியும், ஊக்கத் தொகை கொடுத்தும் தங்கள் பள்ளிக்கு பிடித்துவரும் நிர்வாகத்தின் நோக்கம் 12-ம் வகுப்பில் மாநில அளவிலான தரவரிசையில் ஓரிரு இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான். அப்படி ஒருமுறை பிடித்துவிட்டால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு சேர்க்கை நிரம்பி வழியும், கட்டணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்.

பெற்றோர்களுக்கும் மகனாக, மகளாக இருந்த பிள்ளைகள் 8-ம் வகுப்பு தாண்டியவுடன் மாணவனாக, மாணவியாக மாறிவிடுகின்றனர். பிள்ளைகளின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்பது பெரும்பாலும் நீர்த்துப்போய், என்ன செய்தாவது 10-ம் வகுப்பில் 470, 480 மதிப்பெண்கள் எடுத்து, 12-ம் வகுப்பில் பொறியியல், மருத்துவத்திற்கு தேர்வு பெறும் மதிப்பெண்ணை எடுக்கவைக்கும் - தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் - ஒரு 'பண்ணைப் பள்ளி'யில் சேர்த்துவிட வேண்டும். 'பண்ணைப் பள்ளி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் இந்த இடத்தில் எனக்கு தயக்கமும், தடுமாற்றமும் ஏதுமில்லை.

கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்த, குறிப்பாக நாமக்கல் மாவட்டப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் கூறியதைக் கேட்டபோது இரத்தம் உறைந்துபோனது. ஒரு மதிப்பெண் வினாவிற்கு ஏ,பி,சி,டி என நாலில் ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்கையில் கேள்வியைப் பார்ப்பதற்கு முன் கீழிருக்கும் நான்கு பதில்களைப் பார்த்து அதில் ஒன்றை டிக் செய்துவிட்டுத்தான் கேள்விகளையே பார்ப்போம் என்ற அளவுக்கு மனப்பாடம் செய்யவைக்கப்படுகின்றனர் என ஒரு மாணவர் சொல்கிறார். சாப்பிடும் அறை உட்பட விடுதிகளின் எல்லாத் தூண்களிலும் பதில்கள் ஒட்டப்பட்டிருக்கும் என்பதும், விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு மாணவன் விடைகளைக் கண்டே தீரவேண்டும் என்ற நிலையில் உட்படுத்தப்படுகின்றனர்.

12-ம் வகுப்பில் 1050 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த ஒரு பெண் விஷுவல் கம்யூனிக்கேசன் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார். முதல்நாள் வகுப்பறையில், "விஷுவல் கம்யூனிகேசன் படிப்பைத் தேர்தெடுத்தற்கான காரணம் என்ன!?" என்ற கேள்விக்கு பதில் எழுதத் தெரியாமல் முக்கால் மணி நேரம் முழித்திருக்கிறார். காரணம் "இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டால் அது குறித்து யோசிக்கும் தன்மைகூட அற்றுப் போயிருந்தேன்" என்கிறார்.

படிப்பு என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கும் சூழல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முடக்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் சமயத்தில் உட்சபட்ச அழுத்தங்களுக்கும் ஆட்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு வெளியேறும் மாணவர்களின் நிலையை, நாமக்கல் மாவட்டத்தின் புகழ் பெற்ற கோழிப் பண்ணைகளோடு ஒப்பிடத்தான் தோன்றுகிறது. குஞ்சு பொறித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட எடையை கறிக்கோழி எட்டிவிட வேண்டும் என்பது மட்டுமே பண்ணையாளர்களின் நோக்கம். அப்படி எடை கொண்டுவர என்ன மாதிரியான உணவு, மருந்துகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்து பண்ணையாளர்களுக்கும், அந்தக் கறியை வாங்கி ருசிப்பவர்களுக்கும் கவலையிருப்பதில்லை. அப்படிப்பட்ட இறைச்சியை உண்பவர்கள் புதிது புதிதான நோய்களுக்கும் வாதைகளுக்கும் உள்ளாகும் சூழல் பெருகி வருவதையும் மறுப்பதற்கில்லை.

இந்தப் பண்ணைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எப்படியாவது நல்ல மதிப்பெண் வாங்கி சிறந்த கல்லூரிகளில் கட்டணமின்றி இடம் பிடிக்க வேண்டும் என பெற்றோரும், எப்படியாவது மாநில அளவிலான தரவரிசையில் இடம் பிடிக்க வேண்டும் என நிர்வாகமும் இணைந்து தரும் நெருக்கடிகளில், சிதறும் மாணவர்களின் கொடியதொரு முடிவாக சில நேரங்களில் தற்கொலை அமைகிறது.

பொதுவாக சட்டம் தற்கொலையை தற்கொலையென்று மட்டுமே எடுத்துக் கொண்டாலும், தார்மீகமாக அவற்றை கொலைகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். பதின்வயதில் ஒருவர் தன்னை சுயமாய் மாய்த்துக் 'கொல்ல' சிலபல கொலைகளைச் செய்வதைவிட கூடுதல் வலிமை வேண்டும்.

இதுபோன்ற தற்கொலைகளை அரசல்புரலாக தேர்வு நெருங்கும் சமயங்களில் சற்றே அதிகமாகக் கேள்விப்படுவதுண்டு. எனினும்கூட சின்ன சலனங்களோடு, சகமாணவர்களின் பெற்றோர்களும் இம்மரணங்களைக் கடந்து போய்விடுவது வழக்கம். அதற்கு மிக முக்கியக் காரணம் தன் மகன் / மகள் எப்படியாவது அந்த வருடம் படிப்பை நல்லபடியாக முடித்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது மட்டுமே.

கடந்த வாரத்தில் நாமக்கல் பள்ளி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை வாங்க மறுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் வரை சென்றுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் அந்த செய்தி அமுங்கிவிட்டது.

தற்கொலை குறித்து நிர்வாகமும் பெற்றோரும் சொல்லும் காரணங்கள் 'விருமாண்டி' சினிமாவை நினைவூட்டுகின்றன.

பள்ளி சார்பில் சொல்லப்பட்டு செய்தித்தாள் வழியே அறிவது, அம்மாணவன் ஏற்கனவே ஒரு மாணவனோடு சண்டையிட்டு எச்சரிக்கப்பட்டதாகவும், வேறொரு ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கி எச்சரிக்கப்பட்டதாகவும், இம்முறை குறிப்பிட்ட ஓர் ஆசிரியைக்கு கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதனால் ஒழுங்கு நடவடிக்கையாக விடுதியைவிட்டு வெளியேறுமாறு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

பெற்றோர் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் அந்த மாணவன் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என உடனடியாக மாணவனின் தந்தை முதல் நாள் இரவு அழைக்கப்பட்டதாகவும், அடுத்தநாள் பள்ளி நிர்வாகம் மாணவனின் உடல் நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்தாகவும், பின்னர் மாணவன் இறந்துபோய் விட்டதாக தகவல் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மாணவனின் ஒழுங்கீனமான சில செயல்கள் என பள்ளி சொல்பவை, சக பெற்றோர்களாலும், பெரும்பான்மை சமூகத்தாலும் குற்றமாகவே பார்க்கப்படும் அவலத்துக்குரியவை. காரணம் அப்படிப்பட்ட செயல்கள் தம் பிள்ளையை பாதித்துவிடக்கூடாது என்பது. அதென்ன படிக்கும் வயதில் இப்படிப்பட்ட செயல்கள், அதுவும் இப்படிப்பட்ட சில்லறைத்தனமான செயல்கள் என்று கூட விமர்சிக்கப்படும். மற்ற மாணவர்களின் நிலை கருதி, இது மாதிரியான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நாங்கள் கடுமையாக தண்டிக்கத்தான் வேண்டிவரும் என பள்ளி நிர்வாகம் சொல்லும் சாத்தியமுண்டு.

அதுவரை மகனை மாணவனாகப் பார்த்த பெற்றோர், அவன் உடலை வைத்துக்கொண்டு அதை தம் பிள்ளையாகப் பார்த்து கதறும் சாத்தியமுண்டு. தம் பிள்ளையின் தற்கொலை, நிர்வாகத்தின் கெடுபிடியால், அச்சுறுத்தலால் திணிக்கப்பட்ட கொலையாகவே கருதும் சாத்தியமுண்டு.

இன்றைய கல்வி வியாபாரம் என்பது, மெக்காலே கொடுத்ததை சீர்தூக்கிப் பார்க்காத கையாலாகாத்தனமும், பேராசையை நியாயப்படுத்தும் பெற்றோரும், வியாபாரமாகக் கருதும் பள்ளி நிர்வாகமும், கல்விக் கடிவாளத்தை தன் கையைவிட்டு விடுவித்துக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கும் அரசாங்கமும் இணைந்து நடக்கும் கோழைத்தனமான போர். இதில் இலக்காகச் சிக்கி அடிபட்டு, வதைபட்டு, தனித்திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, அளப்பரிய திறன் கொண்ட மூளையை வெறும் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு மெமெரி கார்டுக்கு நிகரான ஒரு சேமிப்புக் கருவியாக மாற்றப்பட்டு, சுதந்திரம் மறுக்கப்பட்டு, உணர்வுகள் துண்டிக்கப்பட்டு வீழ்ந்துபோவது, அரிதாக மடிந்துபோவது பதின் பருவப் பிள்ளைகளே.

ஓடும் பேருந்தில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வைவிட வித்தியாசமானதொரு வன்புணர்வு நிகழும் வரை, கொடூரமானதொரு வகுப்பறைக் கொலை அரங்கேறும் வரை, இன்னொரு மாணவனின் தற்கொலை கோரமாக நிகழும்வரை சமூகத்தின் பொத்தாம் பொதுவான கள்ள மௌனம் கால்மேல் கால் போட்டவாறு அவரவர் வீட்டுத் திண்ணையில் சொகுசாய் அமர்ந்திருப்பது தொடர்ந்தே தீரும்!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி