இந்தியாவின் 65-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு தனது உரையை வழங்கியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிலையான அரசாங்கம் வர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அப்படியொரு அரசாங்கம் அமையவில்லையென்றால் சந்தர்ப்பவாதிகளின் கையில் நாடு சீர்கெடும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிலையற்ற, முறையற்ற அரசியலுக்கு மாற்றாக, 2014-ஆம் ஆண்டு, நாட்டிற்கு ஆரோக்கியமான ஆண்டாக அமையவேண்டும், அதற்கு வாக்காளர்கள் உதவவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வெற்றி பெறுவது யாராக இருந்தாலும், நிலையான அரசுக்கு பொறுப்பேற்று, நேர்மையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்றார்.
"நாட்டின் ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது, அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்பைக் கொண்டது. கடந்த ஆண்டுகளில் நம் தேசம் சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்து, வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவேண்டும். 1950-ஆம் ஆண்டு குடியரசு பிறந்தது. 2014-ஆம் ஆண்டு இந்தியா மறு எழுச்சி பெற வேண்டும்.
இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் இந்திய கிராமங்களையும், நகரங்களையும் 21-ஆம் நூற்றாண்டின் தரத்திற்கு உயர்த்த பாடுபடுவார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிப் பாருங்கள். அவர்கள் உருவாக்கும் இந்தியாவைப் பார்த்து நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். நிலையான அரசாங்கம் வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
வாக்காளர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் நாட்டைக் காக்கும் பொறுப்பு உள்ளது. இது நாம் சுயபரிசோதனை செய்து செயலில் இறங்க வேண்டிய காலம். சமீப காலங்களில், இந்தியாவில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. நம் மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தை குலைக்க மதவாத சக்திகளும், தீவிரவாதிகளும் முயற்சிப்பார்கள் ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது.
நமது நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது; எந்த எதிரியையும் வீழ்த்தக்கூடியது. நமது படைவீரர்கள் இதை பலமுறை நிரூபித்துள்ளனர். அவர்களது நேர்மை குறித்து கேள்வியெழுப்பும் எவருக்கும் பொது வாழ்வில் ஈடுபட உரிமை இல்லை. நாம் இழந்ததை மீட்க விதி நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இதில் தவறு செய்தால், நம்மை நாம்தான் பழித்துக் கொள்ள வேண்டும்" என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Source : http://tamil.thehindu.com/