புதுடில்லி: வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, விரைவில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, "டெபிட் கார்டுகள்' என்ற பெயரில், வங்கி பண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டையை, ஏ.டி.எம்., இயந்திரங்களில் செருகி, பணம் பெற்றுக் கொள்ளலாம். கணக்கு வைத்துள்ள வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து, எத்தனை முறை வேண்டுமானாலும், பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எந்த கட்டணமும் கிடையாது.ஆனால், பிற வங்கிகளின், ஏ.டி.எம்., இயந்திரங்களில், ஐந்து முறைக்கு மேல், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், அதிகபட்சம், 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதை மாற்றி, "கணக்கு வைத்திருக்கும் வங்கியாக இருந்தாலும், பிற வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரமாக இருந்தாலும், ஐந்து முறை மட்டுமே, கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட தொகையை, கட்டணமாக வசூலிக்க வேண்டும்' என, இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கியிடம், சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.அந்த கோரிக்கையை பரிசீலித்த ரிசர்வ் வங்கி, அதற்கான அனுமதியை, இந்த வாரத்தில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான, எச்.ஆர்.கான் கூறுகை யில், ""இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கு, கட்டணம் விதிக்கப்படலாம்,'' என்றார்.