வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா எவ்வளவு விரைவாக இணைகிறது என்பதை நிர்ணயிப்பதில்தான், நாம் மக்களுக்கு வழங்கும் கல்வியின் வெற்றி அடங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி மேலும் கூறியதாவது: 12வது ஐந்தாண்டு திட்டத்தில், ஆண்டிற்கு 9% வளர்ச்சியை எட்ட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துறைகளில் அதிக முதலீடுகளை, கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
மேலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன், ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சிறந்த வெளிநாட்டு தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், வெளிநாடுகளிலிருந்து பல சிறந்த ஆசிரியர்களை நம் கல்வி நிறுவனங்களுக்கு வரவழைத்து, நம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்குமாறு கோர முடியும்.
இந்தியாவில், தற்போது, 659 பட்டம் அளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களும், 33,023 கல்லூரிகளும் உள்ளன. அதேசமயம், உலகத்தரத்தில் ஒருசில கல்வி நிறுவனங்களே உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்திய தொழில்துறையினரும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.