மிகக்குறைந்த வயதில் தென்துருவத்தை அடைந்து பிரிட்டிஷ் சிறுவன் சாதனை


லண்டன், ஜன.19 : இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுவன் நேற்று தென் துருவத்தை அடைந்து மிகக் குறைந்த வயதில் இந்த சாதனையைப் புரிந்தவன் என்ற பெருமையைப் பெற்றுள்ளான். இதற்கு முன் கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் கனடா நாட்டைச் சேர்ந்த 18 வயதான சாராஆன் மெக்நேர்- லன்ட்ரி என்பவர் மோட்டார் வாகனங்களோ, நாய்களின் துணையோ இல்லாமல் இந்த சாதனையை செய்தவராக கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

லெவிஸ் கிளார்க் என்ற இந்த சிறுவனும் அவனது வழிகாட்டியான கார்ல் ஆல்வே என்பவரும் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தங்களது தென்துருவப் பயணத்தைத் தொடங்கினர். உணவிற்காக நிறுத்திய சில இடங்களைத் தவிர மற்ற நேரங்களில் எந்தவிதத் துணையுமின்றி பனிச்சறுக்கு கருவிகள் மூலம் இவர்கள் அண்டார்டிக்காவைக் கடந்தனர். இங்கு வெப்பநிலை பூஜ்யத்திற்கும் மிகக் குறைவாக இருந்ததாக கிளார்க் தனது இணையதளத் தகவலில் குறிப்பிட்டுள்ளான். 48 நாட்கள் தினமும் 9 மணி நேரம் பயணம் செய்து அவர்கள் நேற்று தங்களின் சாதனையை நிறைவு செய்துள்ளார்கள்.

இந்தத் தகவல் இங்கிலாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிஸ்டல் நகரத்தில் வசித்துவரும் அவனது பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த மாதம் 24-ம் தேதி வீடு திரும்பும் அந்த சிறுவன் வரும் மே, ஜூன் மாதங்களில் தனது பள்ளித்தேர்வை எழுத உள்ளான் என்று அவனது தந்தை தெரிவித்தார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் பிரின்ஸ் டிரஸ்ட்டிற்கு நிதி திரட்டும் விதமாக கிளார்க் இந்த சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளான். தான் இங்கிலாந்து திரும்பியவுடன் தனது இந்த நிகழ்ச்சி கின்னஸ் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு தனது பெயர் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என்ற நம்பிக்கையை அவன் தெரிவித்தான்.

நன்றி : மாலைமலர் 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி