புதுடெல்லி, ஜன. 8 : நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகளில் இன்று லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 2012-ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, லஞ்சம் மற்றும் ஊழலை தேர்தலின் முக்கிய பிரச்சாரமாக கொண்டு நாட்டின் தலைமையகத்தின் அரியணையில் அமர்ந்துள்ளது.
அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி லஞ்சம் பற்றி தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி சேவையை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லஞ்சம் கேட்பவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க (011) 27357169 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் எந்த துறையிலும் நடக்கும் லஞ்ச நடவடிக்கைகள் பற்றிய தகவலை தெரிவிக்க டெல்லி பொதுமக்களும், ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பாளர்களும் இந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.
இந்த உதவியை தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை பெறமுடியும். மக்கள் எளிதில் பிரிந்துகொள்ளும் விதமாக இதை 4 இலக்க எண்ணாக மாற்ற நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். லஞ்சத்தில் ஈடுபடவேண்டும் என்று எண்ணுகிறவர்களின் மனதில் பயத்தை உருவாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக கோபமடைந்துள்ள மக்களின் வாக்குகளை பெற ஆம் ஆத்மி கட்சி முயற்சி எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : மாலைமலர்