அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி! வருகைப் பதிவுக்கு புதிய முறை அமல்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதிகாரிகள் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டு இன்று முதல் "பஞ்ச்சிங்" முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது.

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் நிர்வாக சிறப்பு அதிகாரியாக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து பல்கலை நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கலை அரசு கட்டுப்பாட்டில் வருவதற்கு முன் பணிபுரியும் 12 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற புகார் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து நிர்வாகம், அனைவரையும் குறித்த நேரத்தில் பணிக்கு வரவழைக்க கடிவாளம் போட முடிவு செய்தது.

அதன் எதிரொலியாக "பயோமெட்ரிக்" அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக நிர்வாக அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு "பயோமெட்ரிக்" அடையாள அட்டை வழங்குவதற்கு புகைப்படம், கை விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊழியர்களின் தகவல் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டது.

முதல் கட்டமாக "பயோமெட்ரிக்" அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நிர்வாக அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் (31ம் தேதி) நடந்தது. புதிய அடையாள அட்டையை நிர்வாக சிறப்பு அதிகாரி ஷிவ்தாஸ் மீனா, பதிவாளர் பஞ்சநதத்திற்கு வழங்கி துவக்கி வைத்தார்.

புதிய அடையாள அட்டை நிர்வாக அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள், துணை மற்றும் உதவி பதிவாளர்கள், ஊழியர்கள் என முதல் கட்டமாக 74 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று முதல் அதிகாரிகள், ஊழியர்கள் வருகை பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இவர்கள் நிர்வாக அலுவலக வாசல் சுவரில் உள்ள மிஷினில் அடையாள அட்டையைக் காண்பித்து வருகைப் பதிவேடு செய்ய வேண்டும்.

இதே போன்று படிப்படியாக அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் அடையாள அட்டை மூலம் வருகைப் பதிவு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் இனி சரியான நேரத்திற்கு வரவேண்டும். இல்லையேல் ஆப்சென்ட்தான் என்ற கவலை அனைவரிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி