தொல் பழங்கால பாறை ஓவியங்கள் போடி அருகே கண்டுபிடிப்பு



தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் தாலுகா, பாலாறுபட்டியில் உள்ள, மல்லிங்கர்சாமி மலையில், தொல் பழங்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மல்லிங்கர்சாமி மலையில், சென்னை பல்கலை, தொல்லியல் துறையின் மாணவர் ஜெகதீஸ்வரன், கள மேற்பரப்பு ஆய்வு செய்த போது, பாறை ஓவியங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இது குறித்து, ஆய்வு மாணவர் ஜோதீஸ்வரன் கூறியதாவது:

மல்லிங்கர்சாமி மலையில், சிறிய குகை உள்ளது. இக்குகை, மூன்று பெரும் கற்பாறைகளால் ஆனது. குகைக்குள்ளே செல்ல, மூன்று வழிகள், இயற்கையாகவே அமைந்துள்ளன. குகையில் நுழையும் இடத்தில், பாறை ஓவியங்களை பார்த்தேன். ஓவியங்கள், பறவையின் முகத்துடன் கூடிய, நான்கு மனித உருவங்கள் நடனமாடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பறவை அல்லது விலங்கு முகம் போல, வேடமணிந்து ஆடுதல் என்பது, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நடந்த, நடனமாக இருக்கலாம். இந்த வகையான நடன காட்சி, விழுப்புரம் மாவட்டம், கீழ்வாலை அருகே, கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியத்திலும் காணப்படுகிறது. நடன காட்சிகளுக்கு இடையே, இரண்டு மனிதனை குறிக்கும் குறியீடுகள் காணப்படுகின்றன. இது, சிந்து சமவெளி நாகரிகத்தில், மனிதனை குறிக்க, பயன்படுத்தப்பட்ட குறியீட்டை ஒத்து காணப்படுகிறது.இந்த உருவகங்களுக்கு சற்று கீழே, ஒரு விலங்கின் உருவமும், அதன் மீது மனிதன் ஒருவன் அமர்ந்து, வேட்டையாடுவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 
இப்பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இடத்தின் அருகே, முற்பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரிகள் கிடைக்கப் பெற்றதால், இக்குகையானது, முற்பழங்கற்காலம் முதற்கொண்டு, மனிதர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது என்பதை அறியலாம். இம்முற்பழங்கால மனிதர்களே, இப்பாறை ஓவியங்களை தீட்டினர் என்பதையும், அறியலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி