கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..

இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு தடைகள் வரும் போது அவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். இந்த உதாரணத்தை பார்க்கலாம். சமீபத்தில் நடந்த விபரீதம் இது. லோகேஷ், பவ்யா என்ற இரண்டு சிறுவர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள்.


யாரோ பணத்திற்காக கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற பயத்தில் அவர்களது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தார்கள். போலீஸ் தேடுதல் வேட்டையை தொடங்கியது. பல வழிகளில் தோண்டித் துருவிப் பார்த்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

ஒரு வாரமாக தேடியலைந்து நிம்மதியைத் தொலைத்த பெற்றோர்கள், ‘குழந்தைகள் இருவரும் இறந்து போயிருப்பார்களோ’ என்று அஞ்ச தொடங்கினார்கள். திடீரென்று வியாபாரி ஒருவர் வந்து, பக்கத்து ஊரில் இரண்டு குழந்தைகளை பார்த்தேன் என்றார். போலீஸ் விரைந்து சென்றது. காணாமல் போன அந்த குழந்தைகள் இருவரும் கிடைத்தனர். 

அவர்களிடம் போலீசார், ‘ஏன் வீட்டைவிட்டு வெளியேறினீர்கள்?’ என்று காரணத்தை கேட்டனர். அம்மா அப்பா திட்டியது தான் காரணம் என்றார்கள். பெற்றோரை பழிவாங்கும் நோக்கத்தோடு திட்டம் போட்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். 

இருவரும் பூங்காவிற்கு விளையாடச் சென்றபோது தங்களுக்கு பெற்றோர் மீதிருக்கும் கோபத்தை பற்றி வெளிப்படையாக விவாதித்திருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அவமரியாதை செய்யும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று, ‘காணாமல் போகும்’ இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். 

மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஆறு சிறுமிகள் ஒன்றாக வீட்டைவிட்டு ஓடி விட்டார்கள். பதறிப் போன பெற்றோர் காவல் துறையின் உதவியை நாட, அவர்கள் அதிவேகமாக நகரெங்கும் தேடி, அந்த சிறுமிகளை கண்டுபிடித்து வீடு கொண்டு போய் சேர்த்தனர். ‘பெற்றோர் எப்போதும் எங்களை படி படி என்று உயிரை எடுக்கிறார்கள். 

விளையாடச் செல்லும் நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால் எங்களால் தோழிகளுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை. நாங்கள் ஏதாவது தப்பு செய்தால் கடுமையாக திட்டி அடிக்கிறார்கள். 

எங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கத்தான் எல்லோருமாய் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடினோம்..’ என்று காரணங்களை வரிசைப்படுத்திய அவர்கள், மீண்டும் பெற்றோருடன் செல்ல சில நிபந்தனைகளையும் விதித்தனர். நிபந்தனைகள் என்ன தெரியுமா? ‘இனி அடிக்க மாட்டோம். திட்டமாட்டோம்.

வீட்டுவேலை செய்யச்சொல்ல மாட்டோம் என்று வாக்குறுதி தரவேண்டும்’ என்றார்கள்! (போலீஸ் மத்தியிலே இந்த பஞ்சாயத்து நடந்தது) பிள்ளைகள் சொன்னதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்துபோனார்கள். போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலே, ‘இந்த குழந்தைகளை எப்படி கண்டிக்காமல் எங்களால் வளர்க்க முடியும்? பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்தானே. 

சின்னச்சின்ன வேலைகளை செய்ய குழந்தைகளை பழக்கப்படுத்தித்தானே ஆகவேண்டும்’ என்று கூறினர் பெற்றோர். பின்பு போலீசார் பேம்லி கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த சிறுமிகளுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்வியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெற்றோரின் கண்டிப்பு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவை என்பதை அவர்களுக்கு பக்குவமாக உணர்த்தினார்கள். 

குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்கும் வலியுறுத்தினார்கள். சிறுவர்- சிறுமிகள் மனதளவில் தளர்ந்து, வீட்டை விட்டு வெளியேற, அவர்களது பெற்றோர்களுக்குள் நிரந்தரமாக நடக்கும் சண்டையும் ஒரு காரணம். 

வீட்டில் அமைதி இல்லாமல் போவதும், குடும்பப் பிரச்சினைகளும் குழந்தைகளின் மன நிலையை கெடுக்கின்றன. பெரியவர்களிடம் இருப்பது போன்ற குணாதிசயங்களை சிறுவர், சிறுமியர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு இருக்கும். 

ஆனால் அந்த அன்பை புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளிடம் கிடையாது. அதனால் பெற்றோர் தங்களை திட்டினாலோ, தண்டித்தாலோ அதை மிகப்பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, பெற்றோருக்கு தங்கள் மீது அன்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். 

அப்படிப்பட்ட முடிவுக்கு வரும் குழந்தைகளை பெற்றோர் மேலும் திட்டினால் அவர்கள் மனதில் அது ஆழமான காயத்தை உருவாக்குகிறது. சிறுவர், சிறுமியர்களுக்கு தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய பெரிய சிந்தனை எதுவும் இருக்காது. சாதிக்கவேண்டும் என்ற வெறியும் பெரியவர்களைப்போல் இருக்காது. 

அவர்களது விருப்பம் எல்லாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதற்கான சூழலை பெற்றோர் அமைத்து தரவேண்டும். மாறாக பெற்றோர் தங்கள் சுமைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். திணிப்புதான் பிரச்சினையின் தொடக்கமாக இருக்கிறது. திணிக்கும் வாழ்க்கை இனிக்காது. 

குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள். நல்லவை கெட்டவைகளை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். தோழமையோடு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பதிலுக்கு அவர்களும் தோழமையோடு எல்லா விஷயங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். 

நீங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் கேட்டே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். பிடிவாதம் பிடித்தால் உங்களை குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோர் தங்கள் பிரச்சினைகளை எல்லாம் குழந்தைகளிடம் கூறி எந்நேரமும் புலம்பிக்கொண்டே இருக்கக்கூடாது. ‘உனக்காக நான் இதை செய்தேன். அதை செய்தேன்..’ என்று தொந்தரவு செய்துகொண்டும் இருக்கக்கூடாது.

source:http://www.maalaimalar.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி