ஆசிரியர்களின் நிலை

நாளைய உலகம் யார் கையில்?


நாளைய இந்தியா மாணவர்கள்/இளைஞர்கள் கையில்!


இது அனைவரும் அடிக்கடி கூறும் வார்த்தைகள். இன்றைய சூழலில் நடைமுறையில் இருக்கும் கற்கும் மற்றும் கற்பிக்கும் முறையில் 
மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறிதான். காரணம் தனியார் பள்ளிகளின் / கல்லூரிகளின் பயிற்று முறை.


போதாததற்கு அரசுகளின் சட்டம் வேறு. இன்று யோசித்துப் பார்க்கையில் ஆசிரியர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு ஆசிரியை பலமுறை ஒரு மாணவனால் கத்தியால் குத்தப்பட்டிருப்பது சாதாரணசெய்தியாக உள்ளது. ஆனால், காதல் தோல்வியால் ஒரு மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டால் அந்தப் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்படுகிறது. பெற்றோர்களும் அரசும் மாணவர்களைப் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களின் சிந்தனையை, அறிவு வளர்ச்சியை, திறமையை ஒரு வட்டத்திற்குள்ளாக குறைக்கிறார்கள். இது கசப்பான உண்மை. இந்த மாதிரியான நிகழ்வுகள் அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை. காரணம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய பெற்றோர்ககளின் நோக்கம் தங்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பது மட்டுமே.


தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்லூரியில் பயிலும் இளைஞர்களுக்கும் காரணமின்றி பாக்கெட் மணி கொடுத்து பழக்கி விடுகின்றனர். ஆசிரியர்கள் தவறைச் சுட்டிக் காட்டும் போதும் அது வரை கொடுத்து வந்தப் பணத்தை உடனடியாக நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஒரு இருபது வயதிற்குட்பட்ட மாணவனுக்கு கொலை செய்யுமளவு கோபம் வருகிறது. பார்ப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் “பொறியியல் கல்லூரி ஆசிரியர் மாணவனால் கொல்லப்பட்டார்” என்பது செய்தி மட்டுமே. தனிப்பட்ட குடும்பத்தின் நிலையை யாரும் எண்ணிப் பார்ப்பது இல்லை.


தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அடிகோலைப் பயன்படுத்தக் கூடாது. தகாத வார்த்தைகளில் திட்டக் கூடாது. பள்ளியில் மாணவர்களுக்குள் அடிபட்டு காயமானால் அந்த வகுப்பு ஆசிரியை தான் காரணம். இது எல்லாம் சரியே. சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன் ஆசிரியர்கள் அடித்தார்கள், திட்டினார்கள். அப்போதைய மாணவர்கள் யாரும் வாழ்வில் முன்னேறவில்லையா? அந்த மாதிரியான கல்வி முறையில் படித்த யாரும் இன்று வாழ்க்கையில் தோற்றுப் போனதாகத் (விதி விலக்கும் உண்டு) தெரியவில்லை.


இன்றைய மாணவர்கள் வெகு சீக்கிரமாகப் புரிந்து கொள்கிறார்கள். அதிக திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். மிக நல்ல செய்தி தான். ஆனால் அனைவரும் திறமையானவர்களாக இருக்கிறார்களா? என்பது சிந்திக்கத்தக்கது. CBSE பள்ளியில் படித்து, IT, IIT போன்ற நிறுவனங்களில் வேலைத் தேடி, வேலை கிடைத்ததும் கடமைக்கு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இளைஞர்களாகத் தான் பல பேர் இருக்கிறார்கள். சமூக அக்கறையோ, சமூக பங்களிப்போ அவர்களிடம் காணப்படுவதில்லை. உயிர் முக்கியம் தான். வாழ்க்கை அதை விடவும் முக்கியம். கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை முறையை நினைத்தால் வருத்தத்தைத் தவிர வேறு எதுவும் மிஞ்சுவதில்லை. இவை அனைத்திற்கும் காரணம் மீடியா (Media) தான்.


செய்தித்தாளையோ, இதழ்களையோ படிக்கும் பழக்கம் பெரும்பாலான இளைஞர்களிடம் இல்லை. அனைத்தையும் தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்து கொள்வதாலேயே மோசமான சூழலில் மாணவர்கள் / இளைஞர்கள் வாழ்கிறார்கள். இதை மாற்றுவது தனி மனிதனிடம் இல்லை. ஒவ்வொரு குடிமகனிடமும் உள்ளது. ஏன் அரசிடமும் உள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் நம் பேரன்களும், பேத்திகளும் நம் நாட்டின் அடையாளத்தை இழந்து வாழ்வார்கள்.


- செ. அம்பிகாபதி,
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பெரியார்பல்கலைக் கழகம்,
சேலம்-636 011

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி