உயில் எழுதுவது எப்படி ?


தான் பாடு பட்டு சேர்த்த சொத்து தனது காலத்துக்கு பிறகு தன் பிள்ளைகள் பிரச்சினை இன்றி அனுபவிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருக்கும். அதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது உயில். அதில் யார் யாருக்கு எந்த சொத்து போய் சேர வேண்டும் என்ற விவரத்தை தெளிவாக குறிப்பிட்டு எழுதி வைத்தால் தனது மறைவுக்கு பிறகு சொத்தை வாரிசுகள் பாகப்பிரிவினை செய்வதில் சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

தெளிவாக குறிப்பிட வேண்டும்

சொத்தை தனது விருப்பத்துக்கு ஏற்ப பிடித்தமானவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதி வைக்கும் ஆவணமான இந்த உயில் எழுதியவர் மறைவுக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும் என்பதால் அதில் இருக்கும் விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அதனால் பின்னாளில் பிரச்சினை எழுந்து விடக்கூடாது. உயில் எழுதுபவர் நல்ல மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாத நிலையில் எழுதப்படும் உயில் செல்லாததாகி போய்விடும். குடிபோதையில் எழுதப்பட்ட உயிலும் செல்லாததாகி விடும்.

மேலும் உயிலில் குறிப்பிடப்படும் சொத்து மாடி வீடாக இருந்து அது இரண்டு பாகமாக வாரிசுகளுக்கு பிரிக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு பேருக்கும் சரிபாதி எடுத்து கொள்ள வேண்டும் என்று எழுதாமல் தரைத்தள வீடு யாருக்கு? முதல் தளத்தில் இருக்கும் வீடு யாருக்கு? என்பதை விளக்கமாக எழுதி வைக்க வேண்டும். அதுபோல் நிலத்தை பிரிப்பதிலும் எந்த பகுதி யாருக்கு கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.

பூர்விக சொத்துக்கு உயில் எழுதக்கூடாது

அத்துடன் யார் பெயருக்கு எழுதுகிறோமோ அவருடைய பெயரை தெளிவாக குறிப்பிடவேண்டும். முக்கியமாக செல்லமாக அழைக்கும் பெயரை உயிலில் எழுதிவிடக்கூடாது. அது குழப்பத்தையும், பிரச்சினையையும் விளைவிக்கும். இப்படி உயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அதில் முக்கியமானது எந்த சொத்தை உயில் மூலம் எழுதி வைக்கலாம் என்பது பற்றியது. அதாவது ஒருவர் தான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை தனது வாரிசுகளுக்கு உயிலாக எழுதி வைக்கலாம். ஆனால் வழிவழியாக இருந்து வரும் பூர்வீக சொத்துக்கு எக்காரணம் கொண்டும் உயில் எழுதி வைத்து விடக்கூடாது. அப்படி எழுதி இருந்தால் அந்த உயில் செல்லாது.

செல்லாததாகி விடும்

ஏனெனில் தனிப்பட்ட தன் சொந்த சொத்தை மட்டுமே உயில் எழுதி வைப்பதற்கு உரிமை இருக்கிறது. அதை விடுத்து வேறு சொத்துக்களை எழுதி வைத்தால் அந்த உயில் செல்லாததாகி விடும். மேலும் தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு தான் உயிலாக எழுதி வைக்க வேண்டும் என்று இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.

அவர்கள் தன் உறவுமுறைக்கு சம்பந்தமில்லாதவர்களாகவும் இருக்கலாம். அறக்கட்டளைகளுக்கும் எழுதி கொடுக்கலாம். மைனர் பெயருக்கு உயில் எழுதப்படுவதாக இருந்தால் காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதேசமயத்தில் சொந்த சம்பாத்திய சொத்துக்கு உயில் எழுதி வைக்கவில்லை என்றால் அந்த சொத்து சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு உரிமையுடைய சொத்தாக மாறிவிடும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி