பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

பலரும் நினைப்பதுபோலப் பசுமைப் புரட்சி என்பது இந்தியாவைக் காப்பாற்ற வந்த காயகல்பம் அல்ல; மாறாக, இந்திய வேளாண் முறைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவுதான் பசுமைப் புரட்சி. இந்த விளைவு மேலும் பல பாதகமானவிளைவுகளை ஏற்படுத்தி, இந்திய வேளாண்மையைக் கிட்டத்தட்ட நாசமாக்கிவிட்டது. இதிலிருந்து மீள்வது இரண்டாவது சுதந்திரப் போருக்கு ஒப்பானது – இந்தப் பார்வையையே தன் கருதுகோளாகக் (hypothesis) கொண்டிருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் எழுதிக் காலச்சுவடு வெளியிட்டுள்ள பசுமைப் புரட்சியின் கதை என்னும் நூல். இந்தக் கருது கோளைக் கோட்பாடாக (thesis) நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வாதங்களையும் செறிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறது இந்நூல். 

நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்து கிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்கா விட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோரத் தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுகளின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் சிறப்பம்சங்கள், அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றி விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்நூல் பேசுகிறது. வறுமை, பஞ்சம், வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக்கதைகளைக் கொண்ட பசுமைப் புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.

பசுமைப் புரட்சி இந்தியாவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்னும் கருத்து திரும்பத்திரும்ப முன்வைக்கப்படும் நிலையில் இந்த நூல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி