செவிலியர்களுக்கு இனி அரசு வேலை உண்டு


"செவிலியர் பணி எழுத்துத் தேர்வுக்கு, அரசு கல்லூரிகள், அரசின் அங்கீகாரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் படித்தவர்களை அனுமதிப்பது தொடர்பான, சுகாதாரத் துறையின் உத்தரவு செல்லும்" என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை, 2012 ஜனவரியில், ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் "செவிலியர் பணியிடங்களை, அரசு கல்லூரிகள் மற்றும் அரசின் அங்கீ காரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பலாம். எழுத்துத் தேர்வு மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் இந்த நியமனம் நடக்கும்" என கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுகாதாரத் துறை பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்தார். கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக சுகாதாரத் துறை மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தன. மனுக்களை, தலைமை நீதிபதி அகர்வால், சத்திய நாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. 

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் - ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு பிளீடர், மூர்த்தி, சிறப்பு அரசு பிளீடர், ராஜகோபாலன், செவிலியர் சங்கம் சார்பில், வழக்கறிஞர், சந்திரசேகர் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்த டாக்டர்களை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த டாக்டர்களுடன், அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிப்பதாக, கூடுதல் அட்வகேட் - ஜெனரல், அரவிந்த் பாண்டியன், சரியாக சுட்டிக் காட்டினார். 

எனவே வேலைவாய்ப்புக்காக அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் படித்த டாக்டர்களை, போட்டியிட அனுமதிக்கும் போது "அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் மட்டுமே, வேலைக்கு தகுதியுடையவர்கள்" எனக் கூற முடியாது. சுகாதாரத் துறையின் உத்தரவு, சென்னை மருத்துவப் பணி விதிகளின்படி உள்ளது. 

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் என்றாலும், அவர்களை போட்டி யிட அனுமதித்து, அவர்களில் தகுதி, திறமை பெற்றவர்களே தேர்ந்தெடுக்கப்படுவர். இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பலன் கிடைக்கும். தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அரசு மற்றும் செவிலியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி