"மெயில்' ஏறிப்போன வாழ்த்து அட்டைகள் : கைப்பட எழுதி அனுப்பும் சுகம் இனி மெய்ப்படுமா? - தினமலர் செய்தி

"இனிய தோழனே... கடந்தாண்டு நீஇழந்தவற்றையெல்லாம் இந்தாண்டில் கிடைக்கப் பெற வாழ்த்துக்கள்!' என, மூன்று வரிகளில் 400 மைல் தாண்டி வாழ்த்துக்களை எடுத்துச் செல்லும் வாழ்த்து அட்டைகளை ஞாபகம் இருக்கிறதா? நவீன தகவல் தொழில்நுட்பத்துக்கு பலியான பொருட்களின் பட்டியலில், தபால் அட்டை, இன்லேண்டு கடிதத்துக்கு அடுத்ததாக, இன்று இடம் பிடித்திருப்பது வாழ்த்து அட்டைகள்.

பொதுவாக சில ஆண்டுகள் முன்பு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகையானாலும், முதலில் நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள்தான். ஒருவரே 10, 15 வாழ்த்து அட்டைகளை வாங்கி வந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முகவரிகளை ஒட்டி, தபால் பெட்டியில் சேர்த்து விடுவர். 

அது போய் சேர்ந்ததா, இல்லையா என்பதை அடுத்த இல்ல விழாக்களில் சந்தித்துதான் கேட்டறிவர். இதே முறையையே, பல நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க பயன்படுத்தி வந்தன.

இத்தகைய வழக்கம் எப்போதோ "மெயில்' ஏறி போய்விட்டது. இதற்கு காரணம் எல்லோர் கையிலும் ஐந்து விரல்களுக்கு அடுத்தபடியாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஆறாம் விரலான மொபைல்போன்தான். சில பைசா செலவில், பண்டிகைக்கு ஒருநாள் முன்போ அல்லது பண்டிகை தினத்தன்றோ, வாழ்த்துக்களை அனுப்பும் வசதியால், யாரும் சில ரூபாயையும், நேரத்தையும் வாழ்த்து அட்டைக்காக, செலவழிக்க தயாரில்லை. பிரியமானவர்களுக்கு, வாழ்த்துக்களை சொந்த வரிகளில் நம் கைப்பட எழுதி அனுப்பும்போது இருக்கும் சுகம், யாரோ நமக்கு "டைப்' செய்து அனுப்பிய எஸ்.எம்.எஸ்.,ஐ அப்படியே "பார்வர்டு' செய்யும்போது கிடைப்பதில்லை என்பதே உண்மை.

வாழ்த்து அட்டைகளிலும், பாடலுடன் கூடிய கார்டுகள், டிசைனர் கார்டுகள் என பல புதுமைகள் குவிந்த வண்ணம்தான் உள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினரை தவிர, உயர் வர்க்கத்தினரையே அதிகம் வாங்கி மகிழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எஸ்.எம்.எஸ்., இ- மெயில், பேஸ்புக் உள்ளிட்ட மீடியாக்களையே பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்துகின்றனர். 

வாழ்த்து அட்டை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில்,"பேப்பர், டிசைனர் பேப்பர், பிரிண்டிங் சார்ஜ், ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால், நடப்பாண்டு வாழ்த்து அட்டைகளின் விலை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், வாழ்த்து அட்டைகள் வாங்குவோர் எண்ணிக்கை நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும்பாலும் குறைந்து விட்டது. கண் இமைக்கும் நேரத்தில் சென்றடையும், எஸ்.எம்.எஸ்., இ-மெயில்களில் வாழ்த்துக்களை பரிமாற பழகி விட்டதே இதற்கு காரணம்,' என்றார்.

இவரது கவலையை உறுதிபடுத்துவதாக உள்ளது, இணையதளத்தில் உலா வரும் டிசைன் டிசைனான வாழ்த்து அட்டைகள். ஒரு "மவுஸ் கிளிக்'கில் பிரியமானவர்களுக்கு அனுப்பி விடலாம். வாழ்த்து பரிமாற்றம் என்பது, வெறும் வார்த்தைகளை  பரிமாறுவது மட்டுமல்ல; வார்த்தைகளின் ஊடே நம் அன்பையும் பிணைத்து பரிமாறும் முக்கிய நிகழ்வு. 
இதே நிலை நீடித்தால், இனிவரும் 
தலைமுறையினர் "கூகுளில்' தேடினால்
தான் வாழ்த்து அட்டைகளை அடை
யாளம் காண முடியும் என்றால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

- நமது நிருபர் -

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி