இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் - தினமலர் செய்தி

புதுடில்லி: இந்தியாவில், வேலையின்மை அதிகரித்து வருவதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார மந்த நிலையும், அதனால், புதிய தொழில்கள் தொடங்கப்படாததும் தான், இந்த நிலைக்கு காரணம் என, கூறப்பட்டுள்ளது. 

கடந்த, 10 - 15 ஆண்டுகளுக்கு முன் வரை, நாட்டில், வேலையின்மை பிரச்னை, மிகவும் அதிகமாக இருந்தது. படித்து, பட்டம் பெற்றவர்களும், தொழில் திறமை பெற்றவர்களும், தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.


தகவல் தொழில்நுட்பம் :


அத்தகையவர்களுக்கு, கிடைத்த வேலையும், சாதாரணமானதாகவும், மிகக் குறைந்த சம்பளம் அளிக்கும் வகையிலும் இருந்தது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறையில், நம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து, வேலையில்லா திண்டாட்டம் வெகுவாகக் குறைந்தது.கடந்த, எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன், வேலைக்கு, தகுதியான ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, நம் நாட்டின், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், அந்த பாதிப்பிலிருந்து, நம் வேலைவாய்ப்பு நிலைமை ஒருவாறு தப்பியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு விவகாரத்தில், நம் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது புள்ளிவிவரங்களில் தெரிய வருகிறது.

"சர்வதேச தொழிலாளர் அமைப்பு' எனப்படும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஓர் அங்கம், நம் நாட்டின் வேலைவாய்ப்புகளை ஆராய்ந்து, புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி, 2011ல், 3.5 சதவீதமாக இருந்த, வேலைவாய்ப்பின்மை, 2012ல், 3.6 சதவீதமாக உயர்ந்து, கடந்த ஆண்டில், அதாவது, 2013ல், 3.7 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த, 2004 - 05ம் ஆண்டுகளில் இருந்து, 2009 - 10ம் ஆண்டுகளில், 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளே கிடைத்த நிலையில், அதன் பிறகு, 2009 - 2010ல், அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து, 1.39 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.இதனால், வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு குறைந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது. 


புது தொழில் இல்லை :


இந்நிலையில், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. புதிய தொழில்கள் துவக்கப்படாதது, நாட்டின் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால், மீண்டும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், வேலைவாய்ப்பின்மை சதவீதம், 3.8 என்ற அளவை எட்டக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என, தனியார், பன்னாட்டு நிறுவனங்களின், மூத்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 


இடம் பெயர்தல் :


கிராமப்புறங்களில் இருந்து, ஏராளமானோர், நகர்புறங்களுக்கு இடம்பெயர்வதால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து, அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அவ்வாறே, நகர்புறங்களில், திறமையில்லாத, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிகரிப்பதால், நகர்புறங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. வேலை தேவைக்கும், அளிப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை, குறைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, அரசிடம் தான் உள்ளது. இதை, திறன் வளர்ப்பு மூலம், அரசு, சரி செய்யலாம். வேலை செய்ய தயாராக இருப்பவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், நீண்ட காலத்திற்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
புதிய, கனரக தொழில்கள் துவங்க, ஏராளமான சட்டதிட்டங்களையும், கெடுபிடிகளையும் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், பிற நாடுகளில் முதலீடு செய்ய, பெரிய தொழிலதிபர்கள் விரும்புகின்றனர்.

பொருளாதார மந்த நிலை :


தொழிலுக்கு ஏற்ற சுமுகமான சூழலை உருவாக்க வேண்டியது, அரசின் கடமை என தெரிவிக்கும், தொழில்துறை வல்லுனர்கள், பொருளாதார மந்த நிலையின் பாதிப்பு, பொதுமக்களை சென்றடையாத வண்ணம், தகுந்த ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்துகின்றனர்.நம் நாட்டின் வேலைவாய்ப்பில் உள்ள மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால், 94 சதவீத வேலையாட்கள், வழக்கமான வேலைவாய்ப்புகள் இல்லாத, பிற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இதனால், விரைவில் வேலை இழக்கும் அவர்கள், பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும், நிபுணர்கள் கூறுகின்றனர். தொழில் துறையில் முதலீட்டை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிற்சாலைகளை துவக்க, கெடுபிடிகளை தளர்த்தி, அவற்றிற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், நம் நாட்டின் வேலையின்மை பிரச்னை தீரும் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
Click Here

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி