சென்னை: 'நிர்வாக ரீதியான, உத்தரவுகள் மற்றும் வழக்குகளின் தீர்ப்பு விவரங்கள் அனைத்தையும், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்" என, மத்திய, மேற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாய அலுவலகங்களுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது.
சுற்றுப்புறச்சூழல் தொடர்பான வழக்குகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
டில்லியில், தலைமை அலுவலகமும், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தென் மண்டலம் என்ற "பெஞ்ச்'களும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்
இயங்குகின்றன. தென் மண்டலத்துக்கான தலைமையிடமாக, சென்னை செயல்படுகிறது. இங்கு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அதே போல், மற்ற மண்டலங்களிலும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், மண்டலங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் மற்றும் நிர்வாக ரீதியான உத்தரவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளத்தில், உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதில்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து, 'அனைத்து உத்தரவுகளையும், உடனுக்குடன், பதிவு செய்ய வேண்டும்" என, மண்டல தீர்ப்பாயங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தலைமையிடம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளர் ஜெனரல், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளத்தில், நிர்வாக ரீதியான உத்தரவுகள் மற்றும் இதர உத்தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை எல்லா மண்டல அலுவலகங்களும், அவசரமாக பின்பற்ற வேண்டும்' என, கூறியுள்ளார்.