தேர்தல் கமிஷன் இணையதளத்தில் குழப்பம்


தேர்தல் கமிஷன் இணையதளத்தில், தொகுதி வரைபடம் மாற்றி அச்சிடப்பட்டிருந்ததாலும், அதில் விண்ணப்பித்த, விண்ணப்பத்தின் நிலையை, அறிய முடியாததாலும், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல், நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, இணைய தளம் மூலம், 2.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். 'இணைய தளம் மூலம் விண்ணப்பித்து, வாக்காளர் பட்டியலில், பெயர் இடம் பெறாதோர், தேர்தல் கமிஷன் இணைய தளத்தில், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் கூறப்பட்டிருக்கும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி, இணைய தளத்தில் விண்ணப்பித்தோர், விண்ணப்பத்தின் நிலையை அறிய, தேடிய போது, விவரம் பதிவாகவில்லை என்ற தகவலை மட்டும், பெற முடிந்தது. அதேபோல், சென்னை சட்டசபை தொகுதிகளுக்கான வரைபடத்திற்கு பதிலாக, காட்டுமன்னார்கோவில் தொகுதி வரைபடம் இடம் பெற்றிருந்தது. வாக்காளர் பட்டியலில் மட்டுமின்றி, இணையதளத்திலும் குழப்பம் இருந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், திருத்தம் கோரி, இணையத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, திருத்தம் செய்யப் பட்டிருந்தது. விசாரணைக்கு அதிகாரிகள் வராமலே, திருத்தம் செய்யப்பட்டிருந்தது, அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, 'ஏராளமானோர் ஒரே நேரத்தில், வாக்காளர் பட்டியலை, தேடும் பணியில் ஈடுபட்டதால், 'சர்வர்' பழுதடைந்தது. இணையதளத்தில், தகவல்களை சேர்க்கும் பணி முழுமை பெறவில்லை. ஓரிரு நாளில், தவறுகள் திருத்தப்பட்டு, அனைத்து தகவல்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி