டிஎன்பிஎஸ்சி ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு: இணையதளத்தில் பார்க்கலாம்

டி.என்.பி.எஸ்.சியின் ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஏஓ தேர்வில் 2342 காலி பணியிடம் உள்பட 29 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2014-15ம் ஆண்டுக்குரிய தேர்வு அட்டவணையை தயாரித்துள்ளது. இப்பட்டியலை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் நேற்று மாலை வெளியிட்டார். இதனை டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் சோபனா ஆகியோர் பெற்று கொண்டனர். பின்னர், நவநீதகிருஷ்ணன் அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2014-15ம் ஆண்டுக்குரிய தேர்வு அட்டவணையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் 29 தேர்வுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. இதில், குரூப் 2 தேர்வில் நேர்முக தேர்வு இல்லாத பணியிடங்களுக்கு 1181 பேரும், விஏஓவில் 2342 காலி பணியிடம், இன்ஜினியரிங் தேர்வில் 98 காலி பணியிடம், குரூப் 5ஏ தேர்வில் 25 காலி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. தேர்வுக்கான கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்வாளர்கள் தேர்வுக்கு தங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள 69 சதவீத இடஒதுக்கீடு இத்தேர்வுகளில் பின்பற்றப்படும். போட்டி என்பது தற்போது கடுமையாக உள்ளது. எனவே, தேர்வில் வெற்றி பெற கடுமையாக தேர்வாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், இடஒதுக்கீடு சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஒழுங்காக சமர்ப்பிக்க வேண்டும். இதில், எந்த விதமான முறைகேடும் செய்ய கூடாது. 

ஒழுங்காக சான்றிதழ்களை சமர்ப்பித்தால் விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட முடியும். கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி குரூப் 4 தேர்வில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வை சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியிடப்படும். தேர்வாளர்கள் சரியான சான்றிதழ்களை அளிக்காததே தேர்வு முடிவு தாமதமாவதற்கு காரணம். 600 ஊழியர்களை கொண்டு பணிகளை செய்ய வேண்டியது உள்ளது. எனவே, தேர்வாளர்கள் ஒழுங்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும். 

இதே போல, குருப் 2 தேர்வு வருகிற ஜூலை 6ம் தேதியும், குரூப் ‘7பி’ தேர்வு மே 2வது வாரத்திலும், குரூப் ‘1ஏ’ தேர்வு செப்டம்பர் 14ம் தேதியும், குரூப் 4 தேர்வு அக்டோபர் 19ம் தேதியும், குருப் ‘3ஏ’ தேர்வு நவம்பர் 15ம் தேதியும், குரூப் ‘1பி’ தேர்வு டிசம்பர் 7ம் தேதியும், குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 3வது வாரத்திலும் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் எத்தனை காலி பணியிடங்கள் என்ற அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். ஏற்கனவே, வெளியிடப்பட்ட காலி பணியிட ங்களில் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.


முழுமை அடையாத அட்டவணை 


2013-2014ம் ஆண்டுக்கான ஓராண்டு கால அட்டவணை கடந்த 31.1.13 அன்று வெளியிடப்பட்டது. அப்போது, எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன?, தேர்வு நடக்கும் நாள் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரு சில தேர்வுகளுக்கு மட்டுமே காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை ஏனோ, தானோ என்று வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.


7 தேர்வுகளுக்கு முடிவு வரவில்லை

2013-14ம் ஆண்டுக்குரிய தேர்வு அட்டவணையில் 27 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் 10,105 காலி பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் குரூப் 1 தேர்வில் 25 பணியிடம், குரூப் 2வில் 1064 பணியிடம், குரூப்1பி தேர்வில் 4 பணியிடம், குரூப் 1 தேர்வில் 79 பணியிடம், சென்னை ஐகோர்ட் சர்வீஸ் தேர்வில் 268 பணியிடங்கள், குரூப் 4 தேர்வில் 5,566 காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், அனைத்து தேர்வுகளுக்கும் முதல் நிலை எழுத்து தேர்வு மட்டும் நடந்து முடிந்துள்ளன. 6 தேர்வுகளுக்கு இன்னும் ரிசல்ட் வரவில்லை. ஒரு தேர்வுக்கு கவுன்சலிங் நடைபெற வேண்டி உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி