தரமான வினாத்தாள்களை உருவாக்கினால்தான் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும்

தரமான வினாத்தாள்களை உருவாக்கினால்தான் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று இந்திய மொழிகள் நடுவண் நிறுவன முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ந.நடராசபிள்ளை கூறினார்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கிய இளங்கலை பட்ட வகுப்புக்கான வினாத்தாள் மீள் மதிப்பீடு குறித்த பயிற்சி பட்டறையில் அவர் பேசியதாவது:

கற்றல், கற்பித்தல் அடிப்படையில் வினாத்தாள்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் மேலோட்டமாகவும், குறைபாடுகளுடனும்தான் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.

கேட்ட வினாக்களையே திரும்பக் கேட்பது, பாடத் திட்டத்தை அதன் அளவீட்டு அடிப்படையில் கருத்தில் கொள்ளாமல் தயாரிப்பது, முக்கியமான வினாக்களை குறைந்த மதிப்பெண்களில் கேட்பது போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் வினாத்தாள்கள் வெளியாகின்றன.

பல்வேறு வகையான படிநிலைகளில் பரிசீலனைக்கு உள்பட்டுதான் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக மொழிப் பாடங்களில் வினாக்கள் பழைய வினாத்தாள்களின் கலவையாகவும், புதிய சிந்தனைகளுக்கு வழிவிடாமலும் தயாரிக்கப்படுகின்றன.

இதனால், தேர்வுக்காக முழுமையாக தயாராகும் மாணவர்களுக்கும், இறுதி நேரத்தில் மனனம் செய்யும் மாணவர்ளுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை உருவாகிவிடுகிறது. எனவே, மாணவர்களின் சிந்தனைத் திறனை தூண்டும் வகையிலான வினாத்தாள்களை உருவாக்க பேராசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

தரமான வினாத்தாள்களை உருவாக்கினால் தான் தேர்வுகளின் தரமும், உயர் கல்வியின் தரமும் மேம்படும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி