இந்தியாவிற்கென ஒரு சொந்த ரேங்கிங் அமைப்பை உருவாக்கும் செயல்திட்டத்திற்கு, மத்திய மனிதவள அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இதன்மூலம், சரியான அளவீடுகளின்படி, இந்திய உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் சர்வதேச தரப்பட்டியலில் இடம்பிடிக்க தவறியதையடுத்து, இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற இந்த செயல்திட்டம், அவுட்லைன் பெறுவதற்காக, தற்போது ஐ.ஐ.டி., கவுன்சிலிடம் உள்ளது.
இந்த ரேங்கிங் அமைப்பின்படி, நாடு முழுவதும் பரவியுள்ள முக்கிய இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், இந்திய அளவீடுகள் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, தமக்கான ரேங்கிங் மதிப்பீட்டைப் பெறும். அதேசமயம், ஐ.ஐ.டி., கவுன்சிலின் ஆய்வுக்குப் பின்னரே, இந்த ரேங்கிங் அமைப்பு இறுதி வடிவம் பெறும்.
இதுகுறித்து மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது, இந்திய தரப்படுத்தல் அமைப்பானது, ஐ.ஐ.டி.,களை தாண்டி, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், பல பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கி இருக்கும்.
எதிர்காலத்தில், தனது தொடர்ச்சியான செயல்பாட்டின் விளைவாக, இத்திட்டமானது, ரேங்கிங் மாதிரியை ஒரு சுதந்திரமான ரேங்கிங் ஏஜென்சியாக வடிவமைக்கலாம். அதன்மூலம் உலக கல்வி சந்தையிலுள்ள கலந்துரையாடலை இது மாற்றலாம்.
ஏனெனில், இதுபோன்றதொரு உதாரணம், ஏற்கனவே சீனாவில் உள்ளது. இவ்வாறு மனிதவளத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.