புதுடில்லி : 'எந்த ஒரு கிரிமினல் வழக்கிலாவது, குற்றம் சாட்டப்பட்டவர், கோர்ட்டால், நிரபராதி என விடுவிக்கப்பட்டால், அந்த விசாரணையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆறு வயது சிறுமியை, கற்பழித்து, கொலை செய்ததாக, ஒருவர் மீது, வழக்கு தொடரப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், இது பொய் வழக்கு என, தெரியவந்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்த நீதிபதிகள், சி.கே.பிரசாத், ஜெ.எஸ்.ஹேகர் ஆகியோர் அடங்கிய,'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு உள்ளது. எந்த சூழ்நிலையிலும், நிரபராதிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. கிரிமினல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், கோர்ட்டால், நிரபராதி என, விடுவிக்கப்பட்டால், அந்த விசாரணையை நடத்திய, போலீஸ் அதிகாரியை தண்டிக்க வேண்டும். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதி வழங்கும் நடைமுறையில், தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. சமீபகாலமாக, அப்பாவிகளை, பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. எனவே, அப்பாவிகளுக்கு, பாதுகாப்பு தேவை. தவறு செய்த போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க, அனைத்து மாநில அரசுகளும், உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகளுக்கு, உரிய பயிற்சி அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.