ஆச்சரியமும் அதிர்ச்சியும்
சுய படங்கள் (Selfies), தானாய் மறையும் படங்கள் (Disappearing photos), கடவுத்திருட்டு (Password theft), இணைய உளவு (Internet survivalance), மெய்நிகர் நாணயம் (Virtual currency), அணி கணினி (Wearable computer), திறன் கடிகாரம் (Smart watch) இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ஆம் ஆண்டில் சாமானிய மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்த தொழில்நுட்பப் போக்குகள். இதுவரை பெரும்பாலும் தொழில்நுட்பப் பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்தப் போக்குகள் இந்த ஆண்டு வெகுஜனப் புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன.
மெய்நிகர் நாணயம் (Virtual currency)
ரூபாய், டாலர்,யூரோ இவற்றையெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். இது என்ன புதிதாக மெய்நிகர் நாணயம் ? இணையப் பணமான பிட்காயின் (Bitcoin) தான் இப்படிப் பலரையும் கேட்க வைத்தது. எண்ம நாணயம், டிஜிட்டல் பணம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் உருவம் இல்லாததாக இருந்தாலும் உலகையே ஆளக்கூடியது எனப் பலரால் கொண்டாடப்படுகிறது. மற்ற நாணயங்கள் போல எந்த ஒரு மத்திய வங்கியும் கட்டுப்படுத்தாத இந்தப் புதுயுகப் பணம் அதன் அநாமேதைய தன்மை மற்றும் கட்டணமில்லாப் பரிமாற்றத்திற்காகத் தொழில்நுட்பப் பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் அரசாலும் வெளியிடப்படாத பிட்காயினின் மதிப்பு இணைய பரிவர்த்தனையில் ஏற்ற இறக்கத்துக்கு இலக்கானாலும் ஒரு பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக ஆயிரம் டாலர்களைத் தொட்டபோது எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆயிரத்தைத் தொட்ட பிறகு சரிவைச் சந்தித்தாலும் எதிர்கால நாணயமாக பிட்காயின் கவனிக்கப்படுகிறது.
அணி கணினி (Wearable Computer)
இது பிட்காயின் போலவே கவனத்தை ஈர்த்த மற்றொரு தொழில்நுட்பம். அணி கணினி என்பது, கம்ப்யூட்டர் போன்ற தனி சாதங்கள் தேவையில்லாமல் அணியக்கூடிய ஆடை போன்றவற்றிலேயே கணினியின் ஆற்றலை உள்ளீடு செய்வதாகும். இப்போது வந்திருக்கும் கூகுள் கண்ணாடியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஆனால் ஆய்வு நிலையிலேயே இருந்த இந்தத் தொழில்நுட்பத்திற்குக் கூகுள் கண்ணாடி மூலம் புத்துயிர் கிடைத்திருக்கிறது. சாதாரண மூக்கு கண்ணாடி போல அணிந்து கொண்டு அதிலேயே இணையத்தில் உலாவலாம். காமிராவாக உபயோகப் படுத்தலாம். ஒலிப்பதிவு செய்யலாம் என்றெல்லாம் இந்தக் கண்ணாடியின் மாயத்தை அடுக்குகின்றனர்.
கூகுள் கண்ணாடி அணிந்து காரோட்டிய அமெரிக்கப் பெண்மணிக்குப் போக்குவரத்து மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டது உட்பட இந்தத் தொழில்நுட்பம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை. எதிர்காலத்தில் அணி கணினி பரவலானால் அதில் கூகுள் கண்ணாடிக்குப் பெரும் பங்கு இருக்கும். கூடவே அந்தரங்கத்துக்கும் ஆபத்து இருக்கும் என்பது வேறு விஷயம்.
ஸ்மார்ட்ஃபோன்கள்
ஸ்மார்ட்ஃபோன்களை ஆப்பிளின் ஐஃபோன் பிரபலமாக்கியிருந்தாலும் இன்று சந்தையில் கோலோச்சுவது என்னவோ ஆண்ட்ராய்டுதான். சாதனம் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் போனிலேயே இமெயிலைப் பார்க்கலாம் என்று முதலில் வியக்க வைத்த பிலாக்பெரி தடுமாற்றத்துக்கு ஆளானதும் செல்போன் என்றாலே நோக்கியா தான் என்று ஒரு காலத்தில் பேசப்பட்ட நோக்கியா மைக்ரோசாப்டால் வாங்கப்பட்டதும் இந்த ஆண்டு நடந்தது. இதன் நடுவே ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை ஒரு பில்லியன் எனும் மைல்கல்லையும் இந்த ஆண்டு எட்டியது.
ஸ்மார்ட் வாட்ச்
ஸ்மார்ட் வாட்ச் பற்றியும் இந்த ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லாம் பெபில் வாட்ச் செய்த மாயம். பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனை வெளியே எடுக்காமலேயே அதில் வந்துள்ள இமெயிலையும் குறுஞ்செய்தியையும் கையில் உயர்த்திப் பார்த்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும் பெபில் வாட்ச் இணைய நிதி திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதியைப் பெற்று அறிமுகமாகிப் பலரையும் கவர்ந்தது. கூகுள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யப்போகிறது, சாம்சங் அறிமுகம் செய்யப்போகிறது என்றெல்லாம் பேசப்பட்டு ஸ்மார்ட் வாட்சின் செல்வாக்கு கூடியது.
ஸ்னேப்சேட்
பேஸ்புக்கிற்கு அடுத்து பங்குச்சந்தைக்கு வந்திருக்கும் சமூக வலைத்தளம் ட்விட்டர். ஆனால் அதைவிட அதிகம் கவனத்தை ஈர்த்தது ஸ்நேப்சாட்தான். அனுப்பியவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தானாக மறைந்து விடும் புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் இந்த செல்போன் செயலி இளைஞர்களின் புதிய கலாச்சாரமாகவே உருவெடுத்திருக்கிறது. இத்தனைக்கும் இந்தச் செயலி இதுவரை டவுன்லோடுகளைத் தான் கண்டிருக்கிறதே தவிர லாபத்தை அல்ல. அப்படி இருந்தும் 3 பில்லியன் டாலருக்கு வாங்க முற்படும் அளவுக்கு இந்தச் செல்வாக்கு அதிகரித்திருப்பது ஆச்சரியம் தான். ஆனால் என்ன செய்ய இளசுகள் எல்லாம் ஸ்னேபசாட் வழியேதான் பேசிக்கொள்கின்றனர்.
செல்போனைக் கொண்டு ஒருவர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைத் தான் செல்பீ என்கிறனர். தமிழில் சுயபடங்கள். ஆக்ஸ்போர்டு அகராதி இந்த ஆண்டின் சொல்லாக அங்கீகரிக்கும் அளவுக்கு செல்பீ பிரபலமானது.
பாஸ்வேர்டு திருட்டுகள்
இவை எல்லாம் உற்சாகம் தந்த போக்குகள் என்றால் இணையவாசிகளைக் கவலையில் ஆழ்த்தி இணையக் கண்காணிப்பு பற்றி விழித்துக் கொள்ள வைத்தது ஸ்நோடன் குண்டு. முன்னாள் ஐ.எஸ்.ஐ ஊழியரும் என்.எஸ்.ஏ ஒப்பந்ததாரருமான எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்க உளவு அமைப்பு எப்படி இணைய நிறுவன சர்வர்களையும் இமெயில்களையும் கண்காணிக்கிறது என்பதை அம்பலமாக்கி அதிர வைத்தார். இதன் பிறகு அவர் ஓடி ஒளிய வேண்டியிருந்தாலும் அவரால் கண்காணிப்பு யுகத்தின் மத்தியில் இருக்கும் திகைப்பை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்தக் கண்காணிப்பின் விளைவாக பிரேசில் போன்ற நாடுகள் தனி இண்டெர்நெட்டை உருவாக்குவது பற்றி எல்லாம் பேசத் துவங்கின. ஐக்கிய நாடுகள் சபை சார்பிலான இணைய மாநாட்டிலும் இது பற்றித் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அதுபோல இந்தாண்டு பாஸ்வேர்டு திருட்டுகள் அதிகம். அடோப் போன்ற முன்னணி நிறுவனங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளைத் தாக்காளர்கள் களவாடி இணையதளங்களில் வெளியிட்டுப் பகிரங்கப்படுத்தியது நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் எவ்வளவு பலவீனமானதாக இருக்கின்றன என்று கவலைகொள்ள வைத்தன. பயோமெட்ரிக் பாஸ்வேர்டு, இரண்டு அடுக்குப் பாதுகாப்பு என்றெல்லாம் இப்போது இதற்கான மாற்று வழிகளை விவாதித்து வருகின்றனர்.

தமிழ் விக்கிபீடியா
2014ஆம் ஆண்டு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2013இல் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் தமிழ் விக்கிபீடியா பத்தாண்டுகளைக் கடந்ததுள்ளது. 50,000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டு இந்திய மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் இணைய உலகின் முன்னோடி தேடு இயந்திரங்களில் ஒன்றாக விளங்கிய ஆல்டாவிஸ்டா (ஆம் அப்படி ஒன்று இருந்தது), இந்த ஆண்டோடு மூடு விழா கண்டது இணைய வரலாற்றை அறிந்தவர்களுக்கு வருத்தம் தரக்கூடியது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி