ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மண்டல இயக்குநர் டி.வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜனவரி 16-ஆம் தேதி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்ததில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசின் ஆணையிலேயே (அரசாணை எண்.181) குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் ஆசிரியர் தேர்வு வாரியம் சலுகை வழங்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசாணையின் 9 (ஏ) பிரிவைச் செயல்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதியும் வழங்கவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் கூட விரிவுரையாளர்களுக்கான ஸ்லெட், நெட் தேர்வு நடைமுறைகளே ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஸ்லெட், நெட் தேர்வுகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசின் அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தாததற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயங்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், புதுதில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைமையகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம்  எடுத்துச் செல்லப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை :

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்து உள்ளார்.இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி