மாணவர்கள் அணிந்த கயிறு பள்ளியில் அறுப்பு: கலெக்டர் உத்தரவுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு


ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்கள் கழுத்து, கைகளில் அணிந்த கயிறு அறுக்கப்பட்டது. மாணவ, மாணவியர் நெற்றியில் செந்தூரம், கை மற்றும் கழுத்தில் சுவாமி கயிறு கட்டுவதற்கு கலெக்டர் விதித்த தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தனர்.

மனு விபரம்:
சில நாட்களுக்கு முன், கலெக்டர் தலைமையில் நடந்த பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில், மாணவர்கள் கை மற்றும் கழுத்தில் தெய்வ வழிபாட்டு முறையில் கயிறு கட்டக்கூடாது என, உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள். இந்து மக்கள் நம்பிக்கையுடன் விரதமிருந்து அணிந்து வரும் கயிறுகளை, பள்ளி நிர்வாகம், கத்தரி வைத்து வெட்டி எடுப்பது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட கயிறு தானாகவே அறுந்து விழுந்தாலும், மன உளைச்சல் ஏற்படும். எனவே, தங்கள் உத்தரவு கவலையளிக்கிறது. ஆஞ்சநேயர் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான செந்தூரத்தை நெற்றியில் இட்டு வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன்: சித்தார்கோட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில், இந்து மாணவர்கள் நெற்றியில் பூசியிருந்த செந்தூரத்தை அழிக்க சொல்லியும், கையில் கட்டியிருந்த தெய்வ அட்சதை கயிறுகளை அவிழ்க்க கோரியும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தலைமை ஆசிரியை ஜெரினா: கலெக்டர் உத்தரவுப்படி, மாணவர்கள் கையில் மற்றும் கழுத்தில் கயிறு கட்டி வரக்கூடாது என, அறிவுறுத்தினோம். வேறு உள்நோக்கம் இல்லை. மீறி கட்டி வந்த, ஒரு சில மாணவர்களின் கயிறுகள் அறுக்கப்பட்டது. செந்தூரம் இட்டுவர தடையேதும் விதிக்கவில்லை. ஒரு சிலர் தூண்டுதலின்பேரில், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கலெக்டர்:
மாணவர்கள் நெற்றியில் செந்தூரம் இடுவது குறித்து, ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. அவர்கள் கையில் விதவிதமான பல நிறங்களில், கயிறு கட்டுவதன் மூலம் சட்டம், ஒழுங்கு மற்றும் மத ரீதியான பிரச்னைகளை தவிர்க்கவே, மாணவர்கள் பள்ளிக்கு கயிறு கட்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தான் உண்மை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி