கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:– மத்திய அரசு ஆதார் அட்டை வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் ரேகை, கருவிழி போன்றவைகளை அடையாளமாக கொண்டு ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. 

ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பொதுமக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கும் அடையாள அட்டையாக பயன் படுத்தி வருகின்றனர். எனவே ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்புபடி ஆதார் அட்டை கேட்கக்கூடாது. ஆனால் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஆதார் அட்டை கேட்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பானது. 

அதனை கேட்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் விசாரித்து ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் எண் கேட்கக்கூடாது என கியாஸ் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தீர்ப்பில் கூறி உள்ளனர். மேலும் வழக்கின் முக்கிய மனு மீதான விசாரணை 29– ந்தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி