தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் 26-ஆம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில்: தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் முதல்வர் அறிவிப்பிற்குப் பின்னர், விருதுகள் பெறுபவர்கள் முதல்வரிடமே விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
விருது பெறுபவர்களின் விருப்பத்திற்கிணங்க தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவற்றை 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் வழங்குவார்.
இவ்விருதுகளை பெறுவோர் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.