"மாணவர்கள் போட்டி மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும்" என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 20வது ஆண்டு விழாவில் மதுரை அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் டாக்டர் ரோகிணி தெரிவித்தார்.
விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
"மாணவர்கள் போட்டி மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, மாணவப் பருவத்திற்கு தேவையான விஷயங்கள். ஒன்றாம் வகுப்பில் இருந்து மேற்படிப்பு வரை போட்டி மனப்பான்மை இருந்தால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும், என்றார்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.
கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி பேசியதாவது: "இக்கல்லூரியில் பி.எஸ்சி. அனிமேஷன், பிலிம் அண்ட் "டிவி" புரடக்ஷன், பி.காம். பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ் மூன்றாண்டு படிப்புகள் உள்ளன.
மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் பைனான்ஸ் பாடத்திட்டம் பி.காம். பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் வங்கிப் பணிகளில் சேர்வதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. நாட்டில் 600 "டிவி" சேனல்கள், எப்.எம்., ரேடியோ, எடிட்டிங் மற்றும் விளம்பர தொழிற்சாலைகளில் பணிபுரிய பிலிம் அண்ட் "டிவி" புரடக்ஷன் படிப்பு உதவும்" என்றார்.
மாணவி ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் பத்மனாபன், ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் (பொறுப்பு) ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தனர். நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார், துணை முதல்வர் வெற்றிவேல் பங்கேற்றனர். மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.