கண் தானம் பற்றி பொதுவான தகவல்கள்

கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள் செயல்படுகின்றன.

யார் கண் தானம் செய்யலாம்?
 • ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
 • கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
 • இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
 • ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
 • உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.


யார் கண் தானம் செய்யக் கூடாது?
 • கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.

பயன்கள்
 • கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.

சில பொதுவான தகவல்கள்
 • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
 • ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
 • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
 • கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
 • இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
 • திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
 • இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
 • கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
 • கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.

கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது
 • கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை
 • மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
 • இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
 • கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 • கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
 • இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
 • குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
 • தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

சில இந்தியப் புள்ளி விவரங்கள்
 • இந்தியாவில் பார்வையற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சம்.
 • கருவிழி நோயால் பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10 இலட்சம்.
 • ஒரு ஆண்டுக்குத் தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை.
 • இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம். இந்த எண்ணிக்கையில் தரப் பரிசோதனைகளுக்குப் பின்பு நல்ல நிலையில் கிடைப்பது 40 முதல் 50 சதவிகிதம்தான். பிற கருவிழிகள் வேறு சில ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதாரம்
ரோட்டரி அரவிந்த் அகில உலகக் கண் வங்கி வெளியிட்டுள்ள சிறு கையேட்டுப் பிரதி.

108க்கு போன் செய்தும் கண் தானம் செய்யலாம்- 
 • சென்னை: கண் தானம் செய்ய விரும்பினால் இறந்தவர்களின் உறவினர்கள் 108 இலவச ஆம்புலன்சுக்கு போன் மூலம் தகவல் கொடுக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 
 • 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 5ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. ஜிவிகே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.என்.ஸ்ரீதர் வரவேற்றார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார திட்ட இயக்குனர் பங்கஜ் குமார், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 
 • அமைச்சர் கே.சி.வீரமணி விழாவுக்கு தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை 20 ஆம்புலன்சுடன் தொடங்கப்பட்டது.
 •  தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 629 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. 108 இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 5 ஆண்டுகளில், 23,46,048 பேர் பயன் அடைந்துள்ளனர். 
 • கண் தானம் குறித்தும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களும், தங்கள் உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களது கண்களை தானம் செய்ய விரும்பினால் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யலாம். அவர்கள், கண்களை தானம் பெற்று செல்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க உதவி செய்வார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி