ரேஷன்கடை செயல்பாடுகளில் வெளிப்படையான முறையை கொண்டு வருவதற்காக, அதன் பதிவேடுகளை, குடியரசு தின கிராமசபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது வினியோகத் திட்டம் மற்றும் ரேஷன்கடை செயல்பாடுகளில், வெளிப்படையான நடைமுறையை கொண்டு வர, அனைத்து ரேஷன் கடைகளின் பதிவேடுகளை, சமூக தணிக்கைக்கு உட்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, கிராம ரேஷன்கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கணக்குகள், ஜன.,26 குடியரசு தினத்தன்று நடக்கும் கிராமசபை கூட்டத்தில், சமூக தணிக்கைக்காக, ரேஷன்கடை விற்பனையாளரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் தலைவராக செயல்படுவார். ரேஷன் கடைகளின் செயல்பாடு, அத்தியாவசியப்பொருட்கள் ஒதுக்கீடு, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, அதற்கு வழங்கப்படும் பொருட்கள் விபரம், அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் பயன்பாடு, அதில் பயன்பெறும் ரேஷன்கார்டுதாரர்கள் பற்றிய விபரம், விளக்கம் பெறலாம். இதுதொடர்பான, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, உணவுப்பொருள் வழங்கல்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.