கல்வித்துறை, டி.ஆர்.பி., மீது அவமதிப்பு: வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், என்ற கோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

துறையூர் கொப்பம்பட்டி அசோகன் உட்பட 7 பேர் தாக்கல் செய்த மனு: இளநிலை, முதுகலை பட்டங்கள், பி.எட்., தேர்ச்சி, வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளோம். அந்த பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2010 மே 12 முதல் 14 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. நாங்கள் பங்கேற்றோம்.

பின், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,)பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என, 2010 ஆக.,28 ல் உத்தரவிட்டது. இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை, 'ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்,' என 2011 நவ.,15 ல் உத்தரவிட்டது.என்.சி.டி.இ., உத்தரவிடும் முன், எங்களின் பணி நியமன நடவடிக்கை துவங்கியது. என்.சி.டி.இ., நிபந்தனைகள் எங்களுக்கு பொருந்தாது. அதிலிருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு செய்தோம்.அட்வகேட் ஜெனரல், ''தற்போது காலிப் பணியிடங்கள் இல்லை.

எதிர்காலத்தில் நியமனத்தின்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின்றி, மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,'' என உறுதியளித்தார். இதன்படி 2013 ஆக.,18 ல் நீதிபதி, உத்தரவிட்டார். இந்த பொதுவான உத்தரவு எங்களுக்கு பொருந்தும்.தற்போது, 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. 

நாங்கள் பணி நியமனத்திற்காக, காத்திருக்கிறோம். சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், இதுவரை எங்களை பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கவில்லை. கோர்ட் உத்தரவை அவமதித்ததாகக் கருதி, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டனர்.நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் திருநாவுக்கரசு ஆஜரானார். அரசிடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் சபீதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி