கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். 11,12 ம் வகுப்புகளுக்கு கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் புதிதாக தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்ப்ள்ளிகளில் கணிப்பொறி அறிவியல் தவிர ஏனைய 9 பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் மூலையில் கிடக்கின்றன, பாடம் நடத்த ஆசிரியரும் இல்லை, மாணவர்கள் பயன்படுத்த அனுமதியும் இல்லை.மேல்நிலைப்பள்ளிகளில் இன்னும் மோசமான நிலை தொடர்கிறது, கணிப்பொறி அறிவியல் பாடத்தினை வேறு பாட ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
2010 ல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி இனி வரும் காலங்களில் கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்தவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியராக பணிபுரிய முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பகுதி நேர சிறப்பசிரியர் நியமனத்தில் இது பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.தனியார் பள்ளிகளில் பணிபுரியும் கணிப்பொறி ஆசிரியர்களின் நிலை இன்னும் கொடுமை.இங்கே கணினி ஆசிரியர் என்பவர் டைப்பிஸ்ட், ஆபீஸ் பாய், அலுவலக உதவியாளர் போன்ற வேலைகளை கட்டாயம் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில்,சான்றிதழ்களை ஒப்படைத்து விட்டு அடிமைகளாக நியமிக்கப்படுகிறோம்.
கல்வியியல் கல்லூரிகள் தங்கள் பங்கிற்கு, கணிப்பொறி அறிவியல் பாடத்தில் B.Ed., முடித்தவர்கள் மிகவும் குறைவு, ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் நியமித்தாலும் அனைவருக்கும் வேலை நிச்சயம் என விளம்பரங்கள் தருகின்றன. ஆனால் எங்கள் நிலை இன்றும் தெருவில்தான் என்பது இன்னும் கணிப்பொறியில் B.Ed., படிக்க ஆசைப்படுவோர் புரிந்துகொள்ளவேண்டும்.
கடந்த முறை நடந்த AEEO தேர்விற்கு குறைந்த பட்ச தகுதியாக ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்துடன் B.Ed., என்பது கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கணிப்பொறி அறிவியல் தவிர அனைத்துப்பாடங்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஏன் எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு?கணிப்பொறி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோர் கணினி பயிற்றுனர் என்ற பதவியில் பணிபுரிகின்றனர். மற்ற அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் இளநிலை முடித்தோர்க்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுநிலை முடித்து பணிபெறுவோர்க்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் என்றும் பதவி உள்ளது. இதுலும் பாரபட்சம் ஏன்?இப்படி நாங்கள் அனைத்து தரப்பிலும் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றோம்.சரி இவை போகட்டும் கணிப்பொறி அறிவியல் பாடம் தொழிற்கல்வி என்றால், சிறப்பாசிரியர் நியமனத்திலாவது கணிப்பொறிக்கு இடம் வரும் என காத்திருந்தோம் அதிலும் கிட்த்தது நாமம் தான்.
கடந்த வருடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் போன்ற பாடங்களுக்கு சிறப்பாசிரியர் நியமனத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதிலும் கணிப்பொறிக்கு இடம் இல்லை.கடந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வினை அரசு அறிமுகம் செய்தது, அதில் மற்றவை(OTHERS) என்ற பிரிவில் கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வினை எழுதினோம், சில பேர் அதில் தேர்ச்சியும் பெற்றனர். ஆனால், சன்றிதழ் சரிபார்ப்பின் போதே “ உங்களை யார் தேர்வு எழுத சொன்னார்கள்?” என்று வேண்டா வெறுப்பாக சரிபார்த்து அனுப்பப்பட்டுள்ளனர். சரிபார்ப்பு முடிந்து தேர்வானோர் பட்டியலில் கணிப்பொறி ஆசிரியர் பெயர் NOT SELECTED என இடம் பெற்றது அதற்கு விளக்கமளிக்கும் விதமாக REMARKS ல் Computer Science என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ஏன் தேர்வெழுத எங்களை அனுமதிக்க வேண்டும்? கணிப்பொறி ஆசிரியர்கள் குறைந்தது 10,000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியிருப்போம்.6 முதல் 8 வரை வகுப்புக்களுக்கு கணிப்பொறி பாடம் இல்லாத பொது தேர்வெழுத வேண்டுமா நாங்கள்? அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 50 ரூ, தேர்வுக்கட்டணம்500ரூ ஆசிரியர் தேர்வாணையம் இதனை திருப்பி தருமா? ஆசிரியர் தகுதித் தேர்வினை யார் யார் எழுதலாம், யார் எழுத வேண்டாம் என்பதை தெளிவாக அறிவிப்பது யாருடைய கடமை? தேர்ச்சி பெற்றோருக்கு அரசின் பதில் என்ன?கணிப்பொறி அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்படும் நாங்கள் கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று கணிப்பொறி அறிவியல் பாடம் போதிக்க வேண்டுமா? எங்களுக்கு TET-ஆ இல்லை பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா என்பதையாவது தெளிவாக கூறவேண்டும் அல்லவா?
இனியும் கணிப்பொறி அறிவியலில் B.Ed., தேவையா? எங்களது கோரிக்கைகளை கருணை மனுவாகவாவது ஏற்குமா அரசு?