சென்னை அறிவியல் கண்காட்சியில் தென்னிந்திய பள்ளி மாணவர்களின் விதவிதமான அறிவியல் சாதனங்கள்

தென்னிந்திய அளவிலான பள்ளி மாணவர்களின் ஐந்துநாள் அறிவியல் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி ஜன.20 முதல் ஜன.24வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குநரகமும் பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.இந்தக் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலர் சபீதா மற்றும் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப இயக்குநர் ஜி.கே.குமார் வாழ்த்துரை வழங்கினர்.

தென்னிந்திய அளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகள் என்ற அடிப்படையிலும், 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு காட்சிப் பொருள் என கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் என 250 அறிவியல் கண்டுபிடிப்புகள், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் இடம்பெற்ற பெரும்பான்மையான அறிவியல் கண்டுபிடிப்புகள், மின்சார சேமிப்பு மற்றும் மின்சார தயாரிப்பு உள்ளிட்டவைகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன.புதுச்சேரி மாகியைச் சேர்ந்த மாணவர்கள் சிக்கன் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்காட்சியில் வைத்திருந்தனர். அதேபோல், வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் சல்பர் ஆக்ஸைடு போன்றவைகளால், காற்று மாசுபடுகிறது.

எனவே, காற்று மாசுபடுவதை தடுக்க, ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தேங்காய் நார் அடைப்புடன் கூடிய சைலன்சரை உருவாக்கிய காட்சிப் பொருளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

மேலும், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு குறித்த சோதனைக் காட்சிப் பொருளும் இடம்பிடித்தன.

அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் வீணாகும் மின்சாரத்தை சேமிப்பதற்காக, நாற்காலியில் சென்சார் பொருத்தும் கருவியை காரைக்காலைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்து, கண்காட்சியில் வைத்திருந்தனர். மேலும், மாதிரிவிமானம் மற்றும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பம் சார்ந்த காட்சிப்பொருட்களும், டைனோசர் இயக்கக் காட்சி, ரோபோடிக்ஸ் உள்ளிட்டவையும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
ஐந்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள், மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் இடத்தை பிடித்த கண்காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சி துவக்கவிழா நிகழ்ச்சியில், அனைவருக்கும் கல்வி இயக்கத் தலைவர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கழக சேர்மன் சி.என்.மகேஸ்வரன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கு.தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி