அறிவியல் உலகின் மற்றொரு மைல் கல்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-டி5 - தினமலர் செய்தி


ஸ்ரீஹரிகோட்டா : நீண்ட கால முயற்சிக்கு பின் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இன்டிஜியஸ் வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. மேலும், கிரயோஜெனிக் தொழில்நுட்பம் பெற்ற நாடுகளில் 6வது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. 

ஜிஎஸ்எல்வி-டி5 ஆய்வு : கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர் ஆராய்ச்சிக்கு பின் ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் இன்று மாலை 4.18 மணிக்கு தி்ட்டமிட்டபடி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்கு முன் 2 முறை தோல்வி அடைந்த இந்த ஆய்வு தற்போது வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி, 50 மீட்டர் நீளமும், 415 டன் எடையும் கொண்டதாகும். 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், அதிநவீன தொலைத் தொடர்பு செயற்கோளான, 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட் 14 செயற்கை கோளை சுமந்து கொண்டு விண்ணில் பறந்தது. மொத்தம் ரூ.350 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்டிஜெனியஸ் க்ரோயோஜெனிக் தொழில்நுட்பம் கொண்ட இன்ஜினை இந்தியா பயன்படுத்துவது இது 2வது முறையாகும். இதற்கான கவுன்டவுன் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்து வந்த பாதை : சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் 8வது மிகப் பெரிய தி்ட்டமாக 2010ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் முறையாக ஜிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்பட்டது. அப்போது க்ரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று கட்டுப்பாட்டை இழந்து வெடித்துச் சிதறியது. அதன் பின்னர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி., விண்ணில் ஏவ தயார் நிலையில் இருந்தது. விண்ணில் பாய்வதற்கு 74 நிமிடங்களுக்கு முன் ராக்கெட்டின் 2வது நிலையில் எரிபொருள் கசிவ ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். கசிவு மிகப் பெரிய அளவில் இருந்ததால் குறித்த நேரத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிந்தார்.

இஸ்ரோ சாதனை : 2 கட்ட தோல்விகளைத் தொடர்ந்து தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பல முக்கிய அம்சங்களுடன் இந்த ராக்கெட்டை தயாரித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் சோதனை இந்தியாவின் விண்வெளி அறிவியல் வரலாற்றில் ஒரு மைல் கல் என கருதப்படுகிறது. அதிநவீன திறன் கொண்ட க்ரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு செய்து இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி., டி5 ராக்கெட், தகவல் தொடர்பு செயற்கை கோளுடன் வெற்றிகரமாக இன்று ஏவப்பட்டதை தொடர்ந்து, பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், 'கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு பக்கபலமாக இருந்து இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளும் உழைத்தனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட க்ரயோஜெனிக் இன்ஜினை பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.ஜி.எஸ்.எல்.வி., தொழில் நுட்பத்தில் நமது விஞ்ஞானிகள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. முன்னதாக நாங்கள் எதிர்பார்த்தவாறு, கிரயோஜெனிக் என்ஜின் சிறப்பாக செயல்பட்டது. இந்த வகையில், சுட்டிப்பயல் (ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்) இம்முறை ஒழுங்காக செயல்பட்டுள்ளான்' என்றார். அவரை தொடர்ந்து, விஞ்ஞானிகள் குழுவினர் பேசினர். ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அறிந்த பிரதமர் மன்மோகன்சிங், 'இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறையில் இது ஒரு மைல் கல்' என்றார். மேலும், சிறப்பாக செயலாற்றி விஞ்ஞானிகளுக்கு ஆவர் பாராட்டு தெரிவித்தார். 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி