தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெற்றது. இதில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 35 லட்சத்து 62,910 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு அரசு ஊழியர்கள் சென்று விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர், அனைத்து படிவங்களின் விவரமும் கணினியில் பதிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3.30 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். அங்கு பொதுமக்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எக்ஸ்ட்ரா தகவல்
கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 5 கோடி 14 லட்சத்து 2,794 பேர் இடம் பெற்றிருந்தனர். தற்போது புதிதாக பெயர் சேர்க்க சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 40 லட்சத்தை தொடும் என தெரிகிறது.