2 தேர்வுகளில் வென்று சாதனை நெல்லை சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டனில் படிக்க தேர்வு


      நெல்லை சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிப்பவர் சுப்புலட்சுமி. இவரது சொந்த ஊர் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சி. இவரது தந்தை முப்பிடாதி அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்காக சிறப்பு தகுதி தேர்வு நடந்தது. 


அரசு கல்லுரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க முடியும். மேலும், அவர்களது பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தகுதியுள்ள 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், நெல்லை மாணவி சுப்புலட்சுமி உள்பட 32 தேர்வு பெற்றனர். 


தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் சென்னையில் 5 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், ஆங்கிலத்தில் எழுதுவது, பிரிட்டிஷ் பாணியில் ஆங்கில உச்சரிப்பு, புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட இறுதிக்கட்ட தேர்வில் மாணவி சுப்புலட்சுமி உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


11 பேரில் 3 பேர் மாணவர்கள். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தேர்வாகியுள்ள ஒரே மாணவி சுப்பு லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாணவி சுப்புலட்சுமி லண்டனில் உள்ள எட்ஜ்ஹில் பல்கலைக்கழகத்தில் எம்.காம். 4வது செமஸ்டர் படித்து தேர்வு எழுத உள்ளார். இதற்காக, அவர் வரும் 5ம் தேதி நெல்லையில் இருந்து சென்னை செல்கிறார். 


பின்னர் அங்கிருந்து 7ம் தேதி விமானம் மூலம் லண்டன் செல்கிறார். சென்னையிலிருந்து லண்டன் சென்று கல்வி முடித்து திரும்பி வரும் வரை அவரது அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் ஏற்கிறது.


ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வம்

மாணவி சுப்புலட்சுமி கூறுகையில், ‘எனது தந்தை காருகுறிச்சியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. எனது சகோதரி அபிராமவள்ளி பாளை. ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். நான் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவேன். அதுவே எனக்கு இந்த தேர்வு எழுத ஊக்கமாக இருந்தது. 


இதற்காக, ஏற்கனவே பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்தேன். நம்பிக்கையுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். லண்டனில் சிறப்பாக படித்து எதிர்காலத்தில் கல்லூரி விரிவுரையாளராக வேண்டும் என்பது எனது லட்சியம். எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், கல்லூரி முதல்வர், விரிவுரையாளர்கள், சக மாணவிகளுக்கு நன்றி‘ என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி