2013-ல் கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள்

சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்து மேலை நாடுகளில் பசுமை இலக்கியம் என்ற பெயரில், ஒரு தனிப் பிரிவாகக் கருதப்படுகிறது. தமிழிலும் சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர்கள் சார்ந்த எழுத்து சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டில் வெளியான சுற்றுச்சூழல் நூல்களில் குறிப்பிடத்தகுந்தவற்றில் பலவும் மொழிபெயர்ப்பு நூல்கள். சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்து, தமிழுக்குப் புதிய துறையாக இருப்பதால் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்புகள் அதிகம் வெளியாகின்றன. 37வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டில் கவனம் பெற்ற சூழலியல் சார்ந்த தமிழ் நூல்கள் பற்றி ஒரு பார்வை: http://www.tnguru.com/

1. பறவைகள்: அறிமுகக் கையேடு
பறவையியலுக்கும், பறவை நோக்குவோருக்கும் உற்சாகம் ஊட்டும் வகையில், ‘பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதனும் கவிஞர் ஆசையும் இணைந்து இதை எழுதியுள்ளனர். தமிழ் உயிரின வழிகாட்டிக் கையேடுகளில் இந்த நூல் ஒரு முன்னோடி. பறவைகளின் அடையாளம் குறித்தும், பறவைகளின் பெயர்கள் குறித்தும் இருக்கும் பல்வேறு குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் இந்த நூலில் படங்களும் பெயர்களும் அமைந்துள்ளன. நாம் எளிதில் காண முடிகிற பறவைகளுக்கான இந்த வழிகாட்டி, பறவை அவதானிப்புக்கு உத்வேகம் தரும்.

2. அதோ அந்தப் பறவை போல
இயற்கையியல் துறையில் முப்பதாண்டு கால அனுபவம் பெற்ற இயற்கையியலாளர் ச.முகமது அலி ‘அதோ அந்தப் பறவை போல' (தடாகம் வெளியீடு) நூலை எழுதியுள்ளார். அறிவியல் பார்வையுடன், எளிய நடையில் பறவையியலை (Ornithology) அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். தமிழில் பறவைகள் பற்றி ஏற்கெனவே சில நூல்கள் வந்திருந்தாலும்கூட, பறவையியல் என்ற பறவைகளை ஆராய்ச்சி செய்யும் துறை பற்றிய முதல் நூல் இதுவே.

3. உலராக் கண்ணீர்
மண்ணின் மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கும் இயற்கை சூழலியலை, வளர்ச்சி என்ற பெயரில் அரசே அழித்தொழிக்கும் வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது ஜனகப்ரியா எழுதிய ‘உலராக் கண்ணீர்' (புலம் வெளியீடு). மத்திய இந்தியாவின் கனிம வளத்தையும், இயற்கை வளங்களையும் பெருநிறுவனங்கள் சூறையாடுவதற்கு அனுசரணையாக அரசே ராணுவத்தை அனுப்புவதால், நாட்டின் ஆதிகுடிகளான பழங்குடிகளின் வாழ்க்கைக்கு நேர்ந்த அவலத்தை இந்நூல் பேசுகிறது. பழங்குடி மக்களின் தற்போதைய வாழ்நிலையும், இயற்கையோடு ஒத்திசைந்த அவர்களது பண்பாடும் ஒப்பிடப்பட்டுள்ளன.

4. வங்காரி மாத்தாய்
சூழலியல் துறையிலும் பெண்ணியச் சூழலியல் அதிகம் கவனம் பெறாத துறையாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சேவைக்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் வங்காரி மாத்தாய் பற்றிய ‘மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மாத்தாய்' (பூவுலகின் நண்பர்கள்) நூல், பெண் சூழலியலாளர் ஒருவரைப் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவு. மரங்களை மாற்றத்திற்கான வழியாகக் கண்ட மாத்தாய் பற்றியும், அவருடைய வாழ்நாளில் பல கோடி மரங்களை நட்டதன் பின்புலம் பற்றியும் நூல் விரிவாகப் பேசுகிறது. 21ஆம் நூற்றாண்டுக்கான சூழலியல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், நாம் முன்னெடுக்க வேண்டிய பார்வை சார்ந்து மாறுபட்ட புரிதலை இந்நூல் முன்வைக்கிறது.

5. திணையியல் கோட்பாடுகள்
பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு கொண்டிருந்த நெருக்கமான உறவையும், அதன் அடிப்படையில் உருவான வாழ்வியலையும் எளிய நடையில் விளக்குகிறது பிரபலச் சூழலியல் எழுத்தாளர் பாமயன் எழுதியுள்ள ‘திணையியல் கோட்பாடுகள்' (தடாகம் பதிப்பகம்). நமது மரபு பற்றியும், நமது சூழலியல் பாரம்பரியம் பற்றியும் தெரிந்துகொள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். பண்டைத் தமிழர்களின் அறிவியல் நுட்பத்தையும், அறிவையும் அறிந்துகொள்ள இது போன்ற நூல்கள் உதவும்.

6. திருடப்பட்ட தேசம்
சமீப காலமாகச் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்துக்காகக் கவனம் பெற்று வரும் கவிஞர் நக்கீரனின் சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு ‘திருடப்பட்ட தேசம்' (பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு). திருவண்ணாமலை கவுத்தி-வேடியப்பன் மலையை ஜிண்டால் நிறுவனத்திடம் இருந்து காப்பாற்றிய போராட்டம் முதல் மழைக்காடுகளில் திரியும் பன்னாட்டு மருந்துக் கொள்ளையர்கள் வரை, உள்நாட்டு, சர்வதேசச் சூழலியல் அரசியலைப் பற்றி காத்திரமான பார்வையை முன்வைக்கின்றன இவரது கட்டுரைகள்.

7. நீராதிபத்தியம்
சர்வதேச அளவிலான தண்ணீர் வணிகம் பற்றியும், இந்திய, தமிழக அளவில் அது எப்படித் தன் வலையை விரித்திருக்கிறது என்பது பற்றியும் மாட் விக்டோரியா பார்லோ எழுதி சா.சுரேஷ் மொழிபெயர்த்துள்ள ‘நீராதிபத்தியம்' (எதிர் வெளியீடு) நூல் வழியே அறிந்துகொள்ள முடிகிறது. அடிப்படைத் தேவை என்ற அம்சத்திலிருந்து பறிக்கப்பட்டு, வணிகச் சரக்காகத் தண்ணீர் மாற்றப்பட்டிருப்பது, தண்ணீருக்கான போட்டியை மோசமாக்கி இருக்கிறது. தண்ணீர் தனியார்மயக்கத்தின் பின்னணியில் உள்ள விஷயங்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. பணக்கார நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் நமது குடிநீர் சென்ற கதையை விரிவாகச் சொல்கிறது இந்த நூல்.

8. இயற்கைக்குத் திரும்பும் பாதை
ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் புகழ்பெற்ற நூல் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி'. அவரது மற்றொரு புகழ்பெற்ற நூல் ‘இயற்கைக்குத் திரும்பும் பாதை'. சுற்றுச்சூழல் சார்ந்து நீண்டகாலமாக எழுதி வரும் மருத்துவர் வெ.ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பில் குக்கூ குழந்தைகள் இயக்கம், குவாவாடீஸ், தமிழகப் பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளன.

9. நுகர்வெனும் பெரும் பசி
பிரபல வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா, சுற்றுச்சூழல் சார்ந்தும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அந்த வகையில் அவரது பிரபலமான ஆங்கில நூல் ‘நுகர்வெனும் பெரும் பசி' என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது (எதிர் வெளியீடு). போப்பு மொழிபெயர்த்துள்ள இந்த நூல் சமகால இந்தியச் சுற்றுச்சூழல் பற்றி மேலும் தெளிவான புரிதலைத் தருகிறது.

10. மார்க்சும் சூழலியலும்
காத்திரமான மார்க்சிய நூல்களைப் பதிப்பித்துவரும் விடியல் பதிப்பகம் மார்க்சியச் சூழலியல் அறிஞர் ஜான் பெல்லமி ஃபாஸ்டர் எழுதிய ‘மார்க்சும் சூழலியமும்' என்ற புகழ்பெற்ற நூலைத் தமிழில் வெளியிட்டுள்ளது. மார்க்சியம் சூழலியலைப் பேசுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மார்க்ஸ் ஒரு சூழலியலாளர் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்த நூல். மொழிபெயர்ப்பு வசந்தகுமாரன். ஏற்கெனவே ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘சூழலியல் புரட்சி' என்ற நூலை விடியல் வெளியிட்டுள்ளது.

Courtesy : http://thinkgovtjob.blogspot.in

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி