பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் பெயர் பட்டியலில் முக்கிய திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் ஜன.3ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டியலை சரிபார்ப்பதில் முக்கிய வழிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு: 

*பள்ளியின் செக் லிஸ்டில் அனைத்து தேர்வர்களின் பெயர்களும், அச்செழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

*பெயர் விடுபட்டிருந்தால் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையால் தெளிவாக எழுத வேண்டும். 

*தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, இதர பாடங்களில் தேர்வு எழுத உள்ள மொழி ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். 

*தவறு இருந்தால் சிவப்பு நிற மையால் சுழித்து சரியான விபரத்தை குறிப்பிட வேண்டும். 

*தேர்வர்களின் குரூப் கோடு மற்றும் சப்ஜெக்ட் கோடு வரிசையாக உள்ளதா? என்பதை சரிபார்த்து தவறு இருந்தால் சிவப்பு நிற மையால் சுழித்து சரியான விபரத்தை அருகில் எழுத வேண்டும். 

*பள்ளியின் எண், பெயர் ஆகியவை சரியாக அச்செழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து தவறு இருந்தால் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

*டைப்ரைட்டிங் பாடத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மொழி, தமிழ் அல்லது ஆங்கிலம் என்று சரியாக குறிப்பிட வேண்டும். தவறு இருந்தால் உரிய திருத்தம் மேற்கொள்ளவேண்டும். 

*இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படும் என்பதையும், இதர பாடங்களுக்கு கிடையாது என்பதைக் கருத்தில் கொண்டு செக் லிஸ்டை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். 

*இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். 

*தலைமை ஆசிரியர்கள் நேரடியாக சரிபார்க்காமல் கையெழுத்து போடக்கூடாது. அவ்வாறு கையெழுத்திட்டால் அதன்பின் விளைவுகளையும் முழு பொறுப்பையும் தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும். 

*ஒரே பெயர் மற்றும் தலைப்பு எழுத்து கொண்ட மாணவ, மாணவிகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் அந்தந்த மாணவ, மாணவிகளின் பிறந்த தேதியை மிக கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். 

*இந்த திருத்தங்களை ஜன.3ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் ஆன் லைனில் செய்து, தேர்வர்களின் நலன் பாதிக்காத வகையில் தேர்வு பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும் மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல முறையில் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி