ஏப்ரல் 16 முதல் மே 13 வரை லோக்சபா தேர்தல் ஐந்து கட்டம்?

லோக்சபா தேர்தலை, வரும், ஏப்ரல், 16லிருந்து, மே மாதம், 13ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக நடத்தவும், ஓட்டு எண்ணிக்கையை, மே மாதம், 16ம் தேதி நடத்தவும், தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின், இறுதியான அறிவிப்பு குறித்த பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


ஜூன் 2ல் புதிய அரசு:


தற்போதைய லோக்சபாவின் பதவிக் காலம், வரும், ஜூன், 1ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிதாக தேர்வு செய்யப்படும் லோக்சபா, ஜூன், 2ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும்.இதனால், அரசியல் கட்சிகள், இப்போதே, தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. பா.ஜ., சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.காங்., சார்பில், ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே, வெளியிடப்பட வேண்டும்.

வரைவு அறிக்கை:


இதையடுத்து, தேர்தல் கமிஷனும், தன் பங்கிற்கு, வேலைகளை, சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது. எந்தெந்த தேதிகளில் தேர்தலை நடத்தலாம், எத்தனை கட்டமாக நடத்தலாம், எப்போது ஓட்டு எண்ணிக்கை நடத்தலாம் என்பதற்கான, வரைவு அறிக்கையை, தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.இதில், ஐந்து கட்டங்களாக தேர்தலை நடத்தலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 124 தொகுதிகளுக்கு, ஏப்ரல், 16ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, ஏப்ரல், 23 அல்லது 24ம் தேதிகளில், 141 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக, ஏப்ரல், 30ம் தேதி, 107 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது.நான்காம் கட்டமாக, 85 தொகுதிகளுக்கு, மே மாதம், 7ம் தேதியும், ஐந்தாம் கட்டமாக, 86 தொகுதிகளுக்கு, மே மாதம், 13ம் தேதியும், தேர்தலை நடத்தலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், மே, 16ம் தேதி ஓட்டு எண்ணிக்கையை மேற்கொள்வது என்றும், அந்த வரைவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிகாரிகளுடன் ஆலோசனை:


இந்த தேதிகளை இறுதி செய்வதற்கு முன், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், துணை ராணுவப் படை தலைவர்கள் ஆகியோருடன், இதுகுறித்து, ஆலோசனை நடத்தவும், தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, அடுத்த மாதம், 3ம் தேதி, அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.


அனைத்து அம்சங்களும்:
தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு படையினரை, ஒரு மாநிலத்திலிருந்து, மற்றொரு மாநிலத்துக்கு அழைத்துச் செல்வது, மாநிலங்களின் பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி தேர்வுகள், வானிலை ஆகிய விஷயங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதில், மாநில அரசு அதிகாரிகள் கூறும், ஒரு சில மாற்றங்களை ஏற்று, தேர்தல் தேதிகளில், மாற்றம் செய்யப்படலாம். ஆனாலும், ஓட்டு எண்ணிக்கை தேதியில், எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.இறுதி செய்யப்பட்ட வரைவு அறிக்கை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதல் பெற்ற பின், முறையான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி