இனி ஆண்டுக்கு மானிய விலை காஸ் சிலிண்டர்கள் 12: மத்திய அரசு உடனடி உத்தரவு - தினமலர் செய்தி


புதுடில்லி: ""மானிய விலையில் அளிக்கப்படும் சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல் கூறிய, அடுத்த சில மணி நேரத்திலேயே, அவரின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றது. ""இனி, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்,'' என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுக்கு தேவையான சமையல் காஸ் சிலிண்டர்களை, மத்திய அரசு, மானிய விலையில் அளித்து வருகிறது. மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதால், தங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாக கூறிய, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், "மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, 2012 செப்டம்பரில், மத்திய அரசு, ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, "இனி, ஆண்டுக்கு, ஆறு சிலிண்டர் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். இந்த ஆறு சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும், வாடிக்கையாளர்கள், சந்தை விலையில், கூடுதல் ரூபாய் கொடுத்து, சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்' என, அறிவிப்பை வெளியிட்டது.இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்தாண்டு ஜனவரியில், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. 

ஆனாலும், "மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்' என, பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.பெட்ரோலிய அமைச்சகம், இதை ஏற்க மறுத்தது. பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், "நாட்டில் உள்ள, 89 சதவீத வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர்கள் தான் பயன்படுத்துகின்றனர். 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே, அதைவிட அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களுக்காக, மானிய விலை சிலிண்டரின்எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது' என, திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். 
இந்நிலையில், காங்., கட்சியின் அகில இந்திய பொதுக்குழு நேற்று கூடியது. இதில், காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், ""மானிய விலையில் தற்போது, ஒன்பது சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இது, பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்,'' என்றார். 

ராகுல் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், ""ராகுல் யோசனையை ஏற்று, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 12 ஆக அதிகரிக்கப்படும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்படும்,'' என்றார். 

தற்போது, சென்னையில், மானிய விலை சிலிண்டர், 401 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டரின் சந்தை விலை, 1,258 ரூபாய். அரசின் புதிய அறிவிப்பின்படி, இனிமேல், வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களை, தலா, 401 ரூபாய் விலையில் பெறலாம். இதைவிட, அதிகமான சிலிண்டர் பெற வேண்டுமானால், சிலிண்டர் ஒன்றுக்கு, 857 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.லோக்சபா தேர்தல் நெருங்குவதன் காரணமாக, காங்., மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

* மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு, ஆண்டுக்கு, 3,300லிருந்து, 5,800 கோடி ரூபாய் வரை, கூடுதலாக செலவாகும். 
* அரசின் இந்த முடிவால், மானிய விலையில் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களின் சதவீதம், 97 சதவீதமாக அதிகரிக்கும். 
* மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான பிரிவு, ஒப்புதல் அளித்ததும், இந்த திட்டம் அமலுக்கு வரும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி