செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற வருகிற 2025–ம் ஆண்டு ஆட்களை அழைத்து செல்லும் ‘மார்ஸ்–1’ என்ற திட்டத்தை நெதர்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு விருப்பம் தெரிவித்து உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அவர்களில் 1,058 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்ட பயணத்தில் இவர்கள மட்டுமே செவ்வாய்க்கு அழைத்து செல்லப்படுவார்கள் என மார்ஸ்–1 திட்டத்தின் இணை நிறுவனர் பாஸ் லேண்ட் ஸ்ராப் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘செவ்வாயில் குடியேற 2 லட்சம் பேர் மனு செய்துள்ள நிலையில் 1,058 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியுள்ளவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
மார்ஸ்–1 திட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி நார்பெர்ட் கிராப்ட் கூறும்போது, ‘‘அடுத்தக் கட்டமாக 2014 மற்றும் 2015–ம் ஆண்டில் விண்ணப்பதாரர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான சோதனை நடத்தப்படும்.
அவர்களில் தகுதியானவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார். ஏற்கனவே முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 1,058 பேரில் குர்கானை சேர்ந்த அமுல்பா நிதிகங்குலி என்பவரும் ஒருவர்.
‘‘செவ்வாய் கிரக பயணத்துக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்ததும் மிகவும் ஆச்சரியப்பட்டேன்’’ என்று அவர் கூறினார்.